மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை கலந்தாய்வு தொடக்கம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை (ஜனவரி 12) கலந்தாய்வு தொடங்குவதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அதே மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதையடுத்து, 45,000 முதுநிலை மருத்துவ இடங்களில் சேருவதற்காக கலந்தாய்வை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர்.

ஆனால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளால் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கலந்தாய்வை தொடங்கக் கோரி கடந்த மாதம் நாடு முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். பணிகளைப் புறக்கணித்தனர்.

இதற்கிடையே, கடந்த 7ஆம் தேதி இந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித ஒதுக்கீடும், பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கும் அறிவிப்பு செல்லும் என்று கூறியது. கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்தது. இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு செல்லும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் 2021-2022 கல்வியாண்டின் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை (ஜனவரி 12) கலந்தாய்வு தொடங்குகிறது என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்களுக்கு ஏற்கனவே உறுதி அளித்தபடி, நீட் தேர்வு அடிப்படையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு ஜனவரி 12ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. இதை மருத்துவ கலந்தாய்வுக் குழு நடத்தும். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த நடவடிக்கை நாட்டுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் திட்டமிட்டப்படி கலந்தாய்வு நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

-ராஜ்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

செவ்வாய் 11 ஜன 2022