மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 11 ஜன 2022

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் இறந்த புலிகளின் எண்ணிக்கை?

தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் இறந்த புலிகளின் எண்ணிக்கை?

தேசிய புலிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் இறந்த புலிகளின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் வனவிலங்கு சரணாலயங்களில் இருந்த 23 புலிகள் இறந்துள்ளன என்றும் இதில் இரண்டு புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன, ஒரு புலி மின்சாரம் தாக்கி பலியானது என்றும் தேசிய புலிகள் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

2021இல் முதுமலை புலிகள் காப்பகம், ஹாசனூர் மற்றும் கோவை வனவிலங்கு சரகத்தில் மூன்று புலிகளும் 2020ஆம் ஆண்டு சத்தியமங்கலம், ஆனைமலை மற்றும் ஹாசனூர் சரகத்தில் மொத்தம் எட்டு புலிகளும் 2019இல் ஏழு புலிகளும் 2018இல் ஐந்து புலிகளும் இறந்துள்ளன. இவை தவிர்த்து கடந்த நான்கு ஆண்டுகளில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்த ஒன்பது புலிகள் இறந்துள்ளன.

அதே நேரத்தில் 2014 முதல் 2017 வரையிலான முந்தைய நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் புலிகளின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளன. புலிகள் இறப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய மாநில அரசுகள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அதற்கு பலன் கிடைத்திருப்பதாகவும் வன சரகக் காப்பகம் மற்றும் வனவிலங்கு காப்பக ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதேபோல கடந்த சில ஆண்டுகளில் வனவிலங்கைப் பாதுகாக்கும் நடைமுறை மேம்பட்டு இருப்பதாகவும் வனவிலங்குகள் வேட்டையாடப்படுதல் குறைந்து இருப்பதாகவும் இயற்கை பாதுகாவலர் அமைப்பின் தலைவர் பாராட்டியுள்ளார். இருப்பினும் புதிய தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக வனத் துறைக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கும்பட்சத்தில் வனவிலங்குகளின் இறப்பு மேலும் தடுக்கப்படும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக அறியப்பட்டு இருந்த நிலையில் 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது. அதுவும் 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் மத்தியப்பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. மத்தியப்பிரதேச காடுகளில் மட்டும் 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014இல் மத்தியப்பிரதேசத்தில் 308 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 526 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. இங்கு 524 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் 442 புலிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 312 புலிகளும் வசிக்கின்றன. இந்தப் பட்டியிலில் தமிழகத்துக்கு ஐந்தாம் இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 264 புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

-ராஜ்

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

செவ்வாய் 11 ஜன 2022