மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 ஜன 2022

கோயில்களில் அலைமோதும் கூட்டம்!

கோயில்களில் அலைமோதும் கூட்டம்!

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில், தேவாலயம் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மூன்றுநாள் தடை முடிந்ததையடுத்து, திங்கள்கிழமையான இன்று(ஜனவரி 10) தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பழனி முருகன் கோயில்

பழனி முருகன் கோயிலில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. வருகிற 12 ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதை முன்னிட்டு, கடந்த மூன்று நாட்களாக பழனிக்கு பாத யாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அங்கேயே தங்கியிருந்து இன்று சாமி தரிசனம் செய்ததால் கோயிலில் கூட்டம் அதிகரித்தது.

இராமேஸ்வரம் கோயில்

மூன்று நாட்களுக்கு பிறகு இன்று இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் திறக்கப்பட்டதையடுத்து, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடி வழிபட்டனர்.

அதேசமயம், உளவுத் துறை எச்சரிக்கையால் ராமேஸ்வரம் கோயிலைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே கோயிலின் நான்கு வாசல் பகுதிகளிலும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது உளவுத் துறை எச்சரிக்கை கொடுத்துள்ளதால், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செந்தூர்

அதுபோன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் கொரோனா காரணமாக காலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சணம் செய்தும் மக்கள் வழிபாடு செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தடுப்பூசியின் இரண்டு டோஸை செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், இன்று கோயில் திறக்கப்பட்டதையடுத்து, கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சரிபார்த்த பிறகு சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.

அதுபோன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயங்களில் ஆராதனை நடைபெறாததால், பெரும்பாலான தேவாலயங்களில் இன்று ஆராதனை நடைபெற்றது.

-வினிதா

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

திங்கள் 10 ஜன 2022