மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 9 ஜன 2022

சோலார் நிறுவனத்தை எதிர்த்து திரண்ட திண்டுக்கல் மக்கள்!

சோலார் நிறுவனத்தை எதிர்த்து திரண்ட திண்டுக்கல் மக்கள்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நடகோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று சோலார் மின் நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அங்கு சோலார் மின் நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடந்த மூன்று மாதங்களாக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சோலார் மின் நிலையம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது மீண்டும் சோலார் நிறுவனம் மின் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இதையறிந்த கிராம மக்கள் சோலார் மின் நிலையம் அமைக்கும் பணிகளை நிறுத்த வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தை ரேஷன் கார்டுகளுடன் வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததாலும் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதாலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காலையே தொடங்கிய நிலையில், மாலையில் தாசில்தார் தனுஷ்கோடி, டிஎஸ்பி சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அவர்களிடம் சோலார் நிறுவனம் தங்களில் ஊரில் இருந்து சென்றால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என பொதுமக்கள் கூறினர்.

இதுகுறித்து பேசியுள்ள நடகோட்டையைச் சேர்ந்த விவசாயி சுரேஷ்குமார், “அக்கறைப்பட்டி, வத்தலப்பட்டி, கணபதிபட்டி, சமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட குக்கிராமங்களை உள்ளடக்கியது நடகோட்டை ஊராட்சி. இந்தப் பகுதி மக்கள் பெரும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். குறிப்பாக நெல், சம்பங்கி பயிரிட்டு வருகிறோம்.

இந்த நிலையில், சோலார் மின்நிலையம் அமைப்பதற்காக ஊராட்சியில் உள்ள அரசு நிலங்களை பட்டா போட்டும், ஏழை எளிய விவசாயிகளின் பட்டா நிலங்களை ஏமாற்றி பெயர் மாற்றம் செய்தும் சுமார் 530 ஏக்கர் நிலத்தில் மின் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மின் நிலையம் அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி, மேடு, பள்ளமான பகுதிகளை சீரமைத்தனர். இதில் விவசாய நிலங்களும் அடக்கம்.

இதுகுறித்து சோலார் அமைக்கும் நிறுவனத்தினரிடம் முறையிட்டும் உரிய விளக்கம் அளிக்கவில்லை. இதனால் திண்டுக்கல் கலெக்டர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் சோலார் நிறுவனம் தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு போலி ஆவணங்களை தயார் செய்துள்ளனர். அதை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து தடையில்லா சான்று பெற்றுள்ளனர்.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் சோலார் மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். சோலார் மின் நிலையம் அமைப்பதால் எங்கள் விவசாயம் பாதிக்க வாய்ப்புள்ளது. விவசாயத்தையும், எங்களுக்கான நிலத்தையும் பாதுகாக்க தொடர்ந்து போராட தயாராகிவிட்டோம்” என்று கூறியுள்ளார்.

நடகோட்டை கிராமத்தில் கிராமதான நிலம் 280 ஏக்கர், சர்வோதயா நிலம் 86 ஏக்கர் என மொத்தம் 366 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பள்ளிக்கூடம், தொகுப்பு வீடு, மயானம் ஆகியவை கட்டுவதற்கு வழங்குமாறு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், இந்த இடத்தை போலி பத்திரங்கள் மூலம் சோலார் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

-ராஜ்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

ஞாயிறு 9 ஜன 2022