மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 7 ஜன 2022

பொங்கல் பரிசு தொகுப்பு: ஜனவரி 31 வரை அனுமதி!

பொங்கல் பரிசு தொகுப்பு: ஜனவரி 31 வரை அனுமதி!

டோக்கன்கள் அடிப்படையில் பொருட்கள் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் இம்மாத இறுதிவரை அதாவது ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இதுகுறித்து வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 4ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கும் தொகுப்பினை வழங்கும் பெரும் பணியினைத் தமிழகமெங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பல்வேறு கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுத் துறை மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன் இணைந்து பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் விற்பனையாளர்கள் செய்து வருகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட பொருட்களை வழங்கும்போது சில இடங்களில் சில பொருட்களை விட்டுவிட்டுக் கொடுப்பதாக அலைபேசி வாயிலாகவும் சமூக ஊடகங்கள் வழியாகவும் எனக்குச் செய்திகளாகவும் புகார்களாகவும் வந்துள்ளன.

இதுபோன்ற புகார்களைத் தவிர்த்திட எல்லா பொது விநியோகத் திட்ட அங்காடிகளிலும் பொருட்களின் பட்டியலை வைத்திடவும், பொருட்கள் பெறும் குடும்ப அட்டைதாரர்களிடம் அவர்கள் பெற்ற பொருட்களின் தொகுப்பில் அனைத்துப் பொருட்களும் உள்ளனவா என்று சரி பார்த்திடவும் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாமல் சில இடங்களில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்வதாகவும் செய்திகள் வருகின்றன. இவ்வாறு தவறு செய்த சென்னை (வடக்கு) மண்டலத்தைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பொருட்கள் தொகுப்பு விநியோகத்தில் இரவு பகலாக ஈடுபட்டுவரும் பொது விநியோகத்திட்ட அங்காடிகளின் விற்பனையாளர்கள் தவறு ஏற்படாமலும், பொதுமக்களுக்குச் சிறப்பான முறையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஏதேனும் தவறு ஏற்பட்டாலும் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொருட்கள் தொகுப்பு விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பணியாளர்களும் இப்பணியை மேற்பார்வையிடும் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து இந்தப் பணியினை எவ்விதப் புகாருக்கும் இடமின்றிச் செய்து முடித்திட அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நேற்று (ஜனவரி 6) வரை 43,85,111 அட்டைதாரர்கள் பொருள்கள் தொகுப்பினைப் பெற்றிருக்கிறார்கள். ஜனவரி 10ஆம் தேதி வரை டோக்கன்கள் அடிப்படையில் பொருட்கள் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக ஜனவரி 9ஆம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிவிக்கப்படும் நாட்களில் பெற்றுக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட நாளில் பெற முடியாவிட்டாலும் பொங்கலுக்கு முன்பாக கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். இக்கால கட்டத்திற்குள் தவிர்க்க இயலாத காரணங்களினால் பொருள்கள் தொகுப்பினைப் பெற இயலாதவர்கள் இம்மாத இறுதிவரை அதாவது ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் பொங்கல் திருநாளினைச் சிறப்பாகக் கொண்டாடிட என் அன்பு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

வெள்ளி 7 ஜன 2022