மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 4 ஜன 2022

ரயில்வே பணத்தைக் கொள்ளையடித்த கணவன் மனைவி : நடந்தது என்ன?

ரயில்வே பணத்தைக் கொள்ளையடித்த கணவன் மனைவி : நடந்தது என்ன?

திருவான்மியூர் ரயில் நிலையத்திலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ரயில்வே டி.ஐ.ஜி. ஜெயகவுரி இன்று (ஜனவரி 4) விளக்கமளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டீக்காராம் என்பவர் திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பணியாற்றி வந்தார். திருவான்மியூர் ரயில் நிலையத்தில் வழக்கமாகக் காலை 4.10 மணிக்கு முதல் ரயில் என்பதால், அதற்கு முன்னதாகவே வந்து கவுண்டரை ஓபன் செய்து விடுவார்.

ஆனால் நேற்று நீண்ட நேரமாகக் கவுண்டர் ஓபன் செய்யப்படாததால் சந்தேகமடைந்த பயணிகள் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த ரயில்வே போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரயில்வே போலீசார் கவுண்டர் அருகே வந்து பார்த்தபோது வெளியே பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஊழியர் டீக்காராம் கை கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்துத் திணிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது மூன்று நபர்கள் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு டிக்கெட் கவுண்டரில் இருந்த 1.32 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்று விட்டதாகக் கூறினார்.

இதையடுத்து ரயில்வே டிஐஜி ஜெயகௌரி, சென்னை மண்டல எஸ்பி அதிவீரபாண்டியன், சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புப்படை ஆணையர் செந்தில் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர்.

போலீசார் விசாரணையில் டீக்காராம் கூறுகையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நான் சில வருடங்களாக தெற்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறேன். அதிகாலை 3.50 மணிக்கெல்லாம் வந்து கவுண்டரைத் திறந்து விடுவேன். அதுபோலத்தான் நேற்றும் கவுண்டரைத் திறப்பதற்காக வந்தபோது முகமூடி அணிந்திருந்த 3 பேர் என்னை டிக்கெட் கவுண்டர் அறைக்குள் தள்ளி கட்டிப்போட்டுவிட்டு பணத்தைக் கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் திருவான்மியூர் ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர். மேலும் இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

டிக்கெட் கவுண்டர் பகுதிகளில் சிசிடிவி கேமரா இல்லாத நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

இதில்தான் போலீசாருக்கு முக்கிய துருப்பு கிடைத்தது. டீக்காராம் பணிக்கு வந்த அதே சமயத்தில் அவரது மனைவியும் பின்தொடர்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

எதற்காக அதிகாலை வேளையில் அவரது மனைவியும் ரயில் நிலையத்திற்கு வர வேண்டும் என்று சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பணத்தை இருவரும் வட்டம்போட்டுக் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த பணத்தையும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துள்ள டிஐஜி ஜெயகௌரி, “இந்த புகார் குறித்து தகவல் வந்ததும் சென்று விசாரித்தோம். டீக்காராம் சொன்ன தகவல் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. நுழைவு வாயில், வெளியே செல்லும் வழியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம்.

5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினோம். இதில்,தன் மனைவியோடு சேர்ந்து டீக்காராம் நாடகமாடிக் கொள்ளையடித்தது தெரியவந்தது.

டீக்காராம் நோக்கம் என்ன வென்றால்.. அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருக்கிறது. இதில் பணத்தை இழந்து நண்பர்களிடம் பெரிய தொகையை கடன் வாங்கியிருக்கிறார். கடன் பிரச்சினையை சமாளிக்கதான் மனைவியின் ஒத்துழைப்போடு நாடகமாடிக் கொள்ளையடித்திருக்கிறார்.

இனி ரயில்நிலைய கவுண்டர்களிலும் சிசிடிவி வைப்பதற்குச் சம்பந்தப்பட்ட துறைக்குப் பரிந்துரை செய்வோம். இவ்வழக்கு தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.

இந்நிலையில், டீக்காராமனை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

-பிரியா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

செவ்வாய் 4 ஜன 2022