மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 ஜன 2022

குஜராத் - டெல்லி : அனுமதியின்றிப் பறந்த விமானம்!

குஜராத் - டெல்லி : அனுமதியின்றிப் பறந்த விமானம்!

வான் போக்குவரத்து மையத்திடம் அனுமதி வாங்காமல் குஜராத்திலிருந்து தனியார் பயணியர் விமானம் பறந்தது, பெரும் பிரச்னையாக ஆகியுள்ளது.

பொதுவாக, இந்தியாவில் எந்த விமானமும் தரையிலிருந்து கிளம்பத் தயாராவதற்கு முன்னர், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திடம் அனுமதி பெறவேண்டியது, அவசியம். ஏனென்றால், அந்த சமயத்தில் பறந்துகொண்டிருக்கும் ஏதோ ஒரு விமானம் அவசரமாகத் தரையிறங்க வேண்டுமானால், கட்டுப்பாட்டு மையத்திடம் தெரிவித்துவிட்டு, எந்த நேரமும் உடனடியாக அதற்கு அனுமதி தரப்படலாம்.

அப்படி அவசரமாக ஒரு விமானம் தரையிறங்கினால், பறக்கத் தயாராகும் விமானங்களை கட்டுப்பாட்டு மையம் நிறுத்திவைத்துவிடும்.

இப்படி எந்த விமானமும் அவசரமாகத் தரையிறங்கவில்லை என்பதையும். விமானதள ஓடுபாதை பாதுகாப்பாக இருக்கிறது என்பதையும் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் உறுதிசெய்த பிறகே, பொதுவாக, எந்த விமானமும் பறந்துசெல்ல அனுமதி அளிக்கப்படும்.

தரையிலிருந்து பறக்கத் தயாராகும் ஒவ்வொரு விமானமும் இந்த நிலையாணை விதியைக் கடைபிடிப்பது, வான்வெளியில் விபத்து நேராமல் பாதுகாக்கவும் முக்கியமானது.

இந்த நடைமுறைக்கு இடையே, கடந்த 30ஆம் தேதியன்று குஜராத் மாநிலம் இராஜ்கோட்டிலிருந்து எஸ்ஜி-3703 என்கிற ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தை இயக்கிய விமானிகள், கட்டுப்பாட்டு மையத்தின் அனுமதியைப் பெறாமல் விமானத்தைக் கிளப்பி அது பறக்கவும் தொடங்கிவிட்டது.

அதிர்ச்சியடைந்த இராஜ்கோட் கட்டுப்பாட்டு மையத்தினர், எஸ்ஜி-3703 விமானத்தின் விமானிகளை உடனடியாகத் தொடர்புகொண்டனர். நிலையாணை விதிப்படி அனுமதி பெறாமலேயே உங்கள் விமானத்தை இயக்குகிறீர்களே என அவர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த விமானி, ” தவறு நடந்துவிட்டது; மன்னித்துக்கொள்ளுங்கள்.” என்று கூறியிருக்கிறார்.

விமானம் பறந்துகொண்டிருந்த நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. தரையிறங்கிய அந்த விமானத்தின் விமானிகளை தற்காலிகமாக பணிவழங்காமல் ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் நிறுத்திவைத்திருக்கிறது. நிறுவனத்தின் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், கூடுதலாக, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையும் விசாரணையை நடத்துவதாக அறிவித்துள்ளது.

நாடளவில் வான் போக்குவரத்தைக் கண்காணித்துவரும் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககம், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இராஜ்கோட் வான்போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தினர் சிவில் விமானப் போக்குவரத்து தலைமை இயக்ககத்துக்கு விரிவான அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதில் முழு விசாரணை முடியும்வரை, குறிப்பிட்ட விமானிகளுக்கு பணி வழங்கப்படமாட்டாது என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

-முருகு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

ஞாயிறு 2 ஜன 2022