மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா?: நீதிமன்றம் கண்டனம்!

மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பதா?: நீதிமன்றம் கண்டனம்!

இலங்கையில் தமிழக மீனவர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில், தமிழக மீனவர்கள் 68 பேர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதோடு மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமநாதபுரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்றுக் கூறி ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று(டிசம்பர் 31) மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 68 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் சிறார்கள். இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும்போது கண்ணியத்துடன் நடந்து கொள்வதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்துடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் 68 இந்திய மீனவர்களையும் இந்தியா அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள், “கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் மீனவர்களை தனிமைப்படுத்தி அதன் பின்பு பரிசோதனை செய்யலாம். அதற்காக மீனவர்கள் மீது கிருமி நாசினி தெளித்தது மனிதாபிமானம் இல்லாத செயல். இலங்கை அரசால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என கூறினார்.

மீனவர்களை அவர்கள் குடும்பத்துடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. மேலும் மத்திய அரசு தூதரக ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாக மீனவர்களை இந்தியா அழைத்து வருவார்கள் என நீதிமன்றம் நம்புகிறது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சனி 1 ஜன 2022