மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜன 2022

2022: முதன்முதலாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ!

2022: முதன்முதலாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ!

புத்தாண்டில் முதன்முதலாக சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்த ராக்கெட் நானோ, மைக்ரோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் 2021ஆம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களும் பாதித்துள்ளன. இதன் காரணமாக இந்த 2022 ஆண்டில் புதிய வேகம் காட்டுவதில் இஸ்ரோ முழு முனைப்பாக உள்ளது.

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் ககன்யான் திட்டம், புத்தாண்டில் குறிப்பிடத்தக்க திட்டமாக உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண்கலத்தில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீரர்களை அனுப்புவதற்கு முன்பாக இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பின்னும், ஆண்டின் இறுதியிலும் என இரண்டு முறை ஆள் இல்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதன்பின்னர், விண்வெளி வீரர்கள் (இந்திய விமானப்படையின் மூன்று அதிகாரிகள்) விண்கலம் மூலம் 2023ஆம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதன் மூலம் ககன்யான் திட்டம் சிறகுகளை விரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. .

ககன்யான் திட்டப்பணிக்காக நான்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய ஏவுகணை வாகனத்தில் விண்வெளி வீரர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பக்கொண்டு வரும் திறனை அடைவதுதான் ககன்யான் கனவு திட்டத்தின் நோக்கம் ஆகும்.

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டத்தை இஸ்ரோ கையில் வைத்துள்ளது. கொரோனாவால் தாமதமாகி வந்த இந்தத் திட்டமும் இந்த ஆண்டில் தொடங்கப்படும். ஆதித்யா-எல்1 திட்டம், பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயிண்ட்- 1 (எல்-1) -ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் செருகப்படும். இது இஸ்ரோவின் 2ஆவது உயர்நிலை விண்வெளி இலக்குப் பணியாகும்.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு அதாவது செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ தொடங்க இருக்கிறது. ஏற்கனவே சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிவது உட்பட முக்கிய கண்டுபிடிப்புகள் அரங்கேறின.

சந்திரயான்-2 திட்டத்தில், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் கருவியான லேண்டர் மற்றும் ரோவர் விபத்துக்குள்ளான நிலையில், ஆர்பிட்டர் மட்டும் நிலவின் மேற்பரப்பில் சுற்றி வட்டமிட்டு ஆய்வு செய்து வருகிறது. அதை சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இது சந்திரயான்-2 போன்ற கட்டமைப்புதான். ஆனால், அதில் ஆர்பிட்டர் இருக்காது. சந்திரயான்-2இன் போது ஏவப்பட்ட ஆர்பிட்டர் சந்திரயான்-3க்குப் பயன்படுத்தப்படும். சந்திரயான்-3 திட்டம் 2022ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும்.

குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதில் முன்னோடியாக விளங்கும் இஸ்ரோ, சிறிய செயற்கைகோள்களை எளிதாக விண்ணில் செலுத்துவதற்காக எஸ்எஸ்எல்வி என்ற சிறிய வகை ராக்கெட்டை உருவாக்கி வருகிறது.

இதைப் புத்தாண்டின் முதல் காலாண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எஸ்எஸ்எல்வி வகை ராக்கெட்டைப் பொறுத்தவரையில் 500 கிலோமீட்டர் தூர சுற்றுப்பாதையில் 500 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.

நானோ மற்றும் மைக்ரோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் வகையில், மூன்று நிலைகளுடன் அனைத்து திட வாகனமாக எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டை உருவாக்க ரூ.169 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டில் இஸ்ரோ புதிய சகாப்தங்களைப் படைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

சனி 1 ஜன 2022