மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

நூல் விலை உயர்வு: வெறிச்சோடிய திருப்பூர்!

நூல் விலை உயர்வு:  வெறிச்சோடிய திருப்பூர்!

திருப்பூரில் நூல் விலை உயர்வை எதிர்த்து இன்று முழு அடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவின் பின்னலாடை நகரம் என்றழைக்கப்படும் தொழில் நகரமான திருப்பூர், ஜவுளித் துறையில் மிகவும் பெயர் பெற்றது. இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 26 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலவாணியை ஈட்டி தருவது மட்டுமில்லாமல், நேரடியாகவும்,மறைமுகமாகவும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பின்னலாடை உற்பத்திக்கு பிரதான தேவையாக இருக்கும் நூலின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நூலின் விலை 120 முதல் 150 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இதனால் பின்னலாடை நிறுவனங்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளன. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஒன்றிய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நூல்விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தியிருந்தார்.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஈரோட்டில், ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்திய நிலையில் இன்று(நவம்பர் 26) திருப்பூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகள் ஆதரவுடன் நடைபெறும் போராட்டத்தில் 117 அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன.

முழு அடைப்பு போராட்டம் தவிர, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். ஒன்றிய அரசுக்கு சில கோரிக்கைகளையும், மாநில அரசுக்கு சில கோரிக்கைகளையும் முன்வைத்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 200 கோடிக்கு மேல் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 26 நவ 2021