மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 நவ 2021

‘அவமானமாக இருக்கிறது’: ஆசிரியரின் தற்கொலை கடிதம்!

‘அவமானமாக இருக்கிறது’: ஆசிரியரின் தற்கொலை கடிதம்!

கரூரில் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட மாணவி பயின்ற பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியரும் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி கடந்த நவம்பர் 19ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்னதாக மாணவி எழுதிய கடிதத்தில், 'பாலியல் தொல்லையால் சாகும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும்.நான் இந்த முடிவை எடுக்க காரணமானவரை வெளியில் சொல்ல பயமா இருக்கு' என்று எழுதியிருந்தார். இந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு வெங்கமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவி தற்கொலை செய்துக் கொண்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் நவம்பர் 24ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்கொடுமையால் அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

தற்கொலை செய்துக் கொண்ட மாணவி பயின்று வந்த அதே தனியார் பள்ளியில் சரவணன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த இவரின் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று(நவம்பர் 24) பள்ளிக்கு வந்த ஆசிரியர் சரவணன், மதியம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், தனது வீட்டிற்குச் செல்லாமல், திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நிலையில், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக துறையூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி தற்கொலைக்கும், சரவணன் தற்கொலைக்கும் தொடர்பு எதுவும் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் ஆசிரியர் சரவணன் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில்,” எனது அம்மா, ஜெயந்தி, அக்கா, வளர்மதி, கல்யாணி எல்லாரையும் மிஸ் பண்றேன். ஜெயந்தி (மனைவி) என்னை மன்னித்துவிடு. அனைவரும் என்னை தவறாக நினைக்கிறார்கள். மாணவர்களின் முன் அவமானமாக இருக்கிறது. எனக்கு வாழ ஆசையில்லை. இன்று காலை (நேற்று) வந்தவுடன் மாணவர் ஒருவன் என்னை தவறாக கூறுகிறான். நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை எல்லோரும் தவறாக நினைக்கிறார்கள். ஏன் இப்படி கூறுகிறார்கள் என தெரியவில்லை. நான் கோபத்தில் மாணவர்களை திட்டியுள்ளேன். அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். மிஸ் யூ ஆல்" என்று எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தற்போது இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாணவி தற்கொலை தொடர்பாக வேதியியல் ஆசிரியர் மீது சந்தேகம் இருப்பதாக மாணவி தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கணித ஆசிரியர் தற்கொலை செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

வியாழன் 25 நவ 2021