Xகிச்சன் கீர்த்தனா: சாதம் கட்லெட்

public

பல தடைகளைக் கடந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நேரம் இது. அம்மாக்களுக்கு லஞ்ச் பேக் வேலைகள் மீண்டும் தொடங்கி விட்டன. ‘இன்னிக்கு லஞ்ச்சுக்கு என்ன கொடுக்கலாம்னு யோசிக்கிறதுதான் பெரிய டாஸ்க்காக இருக்கு’ என்று பெருமூச்சுவிடும் மம்மீஸுக்கு, ஆரோக்கியம் நிறைந்த, அதே நேரம் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடக்கூடிய லஞ்ச் பாக்ஸ் உணவுகளில் ஆரோக்கியமானது இந்த சாதம் கட்லெட். ஒரு கைப்பிடி சாதம்கூட சாப்பிடாத குழந்தைகளை ஒரு கப் சாதம் சாப்பிட வைக்கும் இந்த கட்லெட் சாதம், காய்கறிகள் எல்லாம் இதனுள்ளேயே இருப்பதால் தேவையான சத்தும் கிடைக்கும்.

**என்ன தேவை?**

நன்கு வேகவைத்த சாதம் – ஒன்றரை கப்

உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும்)

குடமிளகாய் (நறுக்கியது) – 2 டீஸ்பூன்

வேகவைத்து, மசித்த கேரட், பட்டாணி அல்லது ஏதாவது காய்கறி – 2 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன்

நறுக்கிய வெங்காயம்- 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – 4 டீஸ்பூன்

பிரெட் தூள், உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

சாதத்தை நன்றாக மசித்துக்கொள்ளவும் (அரைக்க வேண்டாம்; கையால் மசித்தால் போதும்). கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு, வேகவைத்த சாதம், மசித்த உருளைக்கிழங்கு, காய்கறி, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து மேலும் வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, ஆறியதும் கையால் நன்றாகப் பிசைந்து விரும்பிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்யவும். லேசாக பிரெட் தூளில் புரட்டி எடுத்து வைக்கவும். கட்லெட்டுகளை தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்விட்டு பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்து எடுத்து, லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்பவும்.

**சைடிஷ்: தக்காளி இனிப்புச் சட்னி**

ஒரு தக்காளி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 2 சிட்டிகை உப்பு இவற்றை சேர்த்து, நன்றாக அரைக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் வெண்ணெய் அல்லது எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த கலவையை சேர்த்து, ஒரு கிராம்பு, சிறிய துண்டு பட்டை சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக வற்றும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். மறுபடியும் அரை கப் தண்ணீர் ஊற்றி வற்றும் வரை தீயில் வைக்கவும். நன்றாக பச்சை வாசனை போகும் வரை வற்றவைத்து எடுத்தால் இனிப்புச் சட்னி தயார். சாஸ் போன்று இருக்கும் இதை கட்லெட் உடன் கொடுத்து அனுப்பவும்.

**[நேற்றைய ரெசிப்பி: கொத்து தோசை](https://www.minnambalam.com/public/2021/11/24/1/kothu-dosa)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *