மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

குறையும் கொரோனா பரிசோதனை: எச்சரிக்கும் ஒன்றிய அரசு!

குறையும் கொரோனா பரிசோதனை: எச்சரிக்கும் ஒன்றிய அரசு!

போதுமான அளவு கொரோனா பரிசோதனைகள் இல்லாததால், இந்தியாவில் பரவும் நோய்த்தொற்றின் உண்மையான அளவைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என்று ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், மற்ற நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமெடுத்துள்ளதால் சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இதற்கிடையில் மூன்றாவது அலை வந்தாலும், அந்தளவுக்கு பாதிப்பு இருக்காது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(நவம்பர் 24) நாகாலாந்து, சிக்கிம், மகாராஷ்டிரா, கேரளா, கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஜம்மு மற்றும் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.

அதில்,” மேலே குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் வாராந்திர கொரோனா பரிசோதனை விகிதங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு கொரோனா பரிசோதனைகள் இல்லாததால், இந்தியாவில் பரவும் நோய் தொற்றின் உண்மையான அளவை கண்டறிவது கடினமாக உள்ளது.

சமீப காலமாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படும் சில வளர்ந்த நாடுகள் கூட நான்காவது மற்றும் ஐந்தாவது அலைகளை எதிர்கொண்டுள்ளன. இவ்வாறு நோயின் தன்மையும், தீவிரத்தையும் கணிக்க முடியாத நிலை உள்ளதால் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

இதுவரை கிடைத்த பயன்களை பாதுகாக்கவும், கொரோனா பரவுதல் மோசமடைவதைத் தவிர்க்கவும் அனைத்து முயற்சிகளும் செயல்படுத்தப்பட வேண்டும். திருமணங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், விடுமுறை காரணமாக மக்கள் பயணங்கள் அதிகரித்திருப்பதால், கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்துவது அவசியமாகும். சில மாநிலங்களில் குளிர்காலம் மற்றும் காற்று மாசு அதிகரித்துள்ளதால் அங்குள்ளவர்களின் சுவாசக் கோளாறு பிரச்சினைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இதற்கு தொடர் மற்றும் அதிகளவு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சுகாதாரத் துறை கடிதம் எழுதிய மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. ஏனென்றால், இங்கு தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறையவில்லை.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 741ஆக குறைந்துள்ளது. கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை குறையவில்லை.

கொரோனா உச்சத்தில் இருந்தபோது எந்தளவு பரிசோதனை செய்யப்பட்டதோ, அதேஅளவு தற்போதும் பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 1 லட்சத்து 548 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 5 கோடியே 26 லட்சத்து 29 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021