மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

அனைத்து வேலைகளையும் நீதிமன்றமே ஏற்க முடியுமா?

அனைத்து வேலைகளையும் நீதிமன்றமே ஏற்க முடியுமா?

ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், அரசு அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை மற்றும் சாப்டூர் கிராமத்திலுள்ள ஆர்.எப் ஓடை ஆகியவற்றை நம்பியே அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், இந்த இரண்டு ஓடைகளிலும் பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் விவசாயம் செய்வதற்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து கடந்த 2020ஆம் ஆண்டு வி.ஏ.ஓ ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்துள்ளார். ஆனால் அதன் மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இரண்டு ஓடைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராமத்திலுள்ள ஓடை மற்றும் சாப்டூர் கிராமத்திலுள்ள ஆர்.எப் ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று(நவம்பர் 24) நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைத்து பொறுப்புகளையும், வேலைகளையும் நீதிமன்றமே ஏற்க முடியுமா? என கேள்வி எழுப்பினர்.

மேலும் உசிலம்பட்டி வருவாய் மண்டல அலுவலரும், பேரையூர் தாசில்தாரும் சம்பந்தப்பட்ட ஓடைகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி நான்கு வாரத்திற்குள் ஓடைகளை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021