மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 நவ 2021

கிச்சன் கீர்த்தனா: கொத்து தோசை

கிச்சன் கீர்த்தனா: கொத்து தோசை

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குச் சுவையான, வித்தியாசமான உணவு வகைகளைத் தயாரித்துக் கொடுக்கும்போதுதான் அவர்கள் மீதம் வைக்காமல் சாப்பிடுவார்கள். அதனால் அன்றாடம் தயாரிக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பிகளில் கவனம் செலுத்துவது அவசியம். அதே நேரம் எளிதில் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றால் அதற்கான பெஸ்ட் சாய்ஸ் சுவையான இந்த கொத்து தோசை.

என்ன தேவை?

தோசை மாவு - 2 கரண்டி

முட்டை - ஒன்று

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

மிளகு - அரை டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும். முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும். தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). முட்டையை உடைத்து, சிறிது உப்பு சேர்த்து அடித்து, தோசை மீது (வேகாத தோசை) உற்றவும். பின்னர் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டவும். கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பாதி வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும் பின்னர் மிளகு - சீரகப் பொடி சேர்த்து வதக்கி, நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

சைடிஷ்: தக்காளி இனிப்பு சட்னி

ஒரு தக்காளி, 2 டீஸ்பூன் சர்க்கரை, 2 சிட்டிகை உப்பு இவற்றை சேர்த்து, நன்றாக அரைக்கவும். ஒரு கடாயில் 2 டீஸ்பூன் வெண்ணெய் அல்லது எண்ணெய் விட்டு, சூடானதும் அரைத்த கலவையை சேர்த்து, ஒரு கிராம்பு, சிறிய துண்டு பட்டை சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். நன்றாக வற்றும் வரை அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். மறுபடியும் அரை கப் தண்ணீர் ஊற்றி வற்றும் வரை தீயில் வைக்கவும். நன்றாக பச்சை வாசனை போகும் வரை வற்றவைத்து எடுத்தால் இனிப்பு சட்னி தயார். சாஸ் போன்று இருக்கும் இதை கொத்து தோசையுடன் உடன் கொடுத்து அனுப்பவும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சிக்கன் சால்னாவுடனும் பரிமாறலாம்.

சைடிஷ்: ஈஸி சிக்கன் சால்னா

வெங்காயம், தக்காளி துண்டுகள் - ஒரு கப், இஞ்சி - ஒரு இஞ்ச் துண்டு (தோல் சீவியது) பூண்டு - 2 பல், கொத்தமல்லித்தழை சிறிதளவு, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், வேர்க்கடலை - ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்... இவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து ஒரு குக்கரினுள் சேர்க்கவும். இதனுடன் கால் கிலோ சிக்கனை நன்றாகக் கழுவி சேர்த்து, தேவையான அளவு உப்பு, 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து நன்றாகக் கலந்து குக்கரை மூடி, குறைந்த தீயில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் ஈஸி சிக்கன் சால்னா ரெடி.

குறிப்பு

சைவம் சாப்பிடுபவர்கள், சிக்கனுக்குப் பதிலாக பட்டாணி அல்லது தக்காளி சேர்த்து சால்னா தயாரிக்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: தால் சப்பாத்தி

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

புதன் 24 நவ 2021