[கிச்சன் கீர்த்தனா: தால் சப்பாத்தி

public

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் எழுந்ததும் குழந்தைகளுக்கான மெனுவைப் பற்றி யோசிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறதல்லவா? தினம் ஒரு புதுமையான மெனுவைக் குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரி தயாரித்துக் கொடுப்பது உண்மையில் சவாலானதுதான். ஆனால், டென்ஷனே இல்லாமல் குழந்தைகளுக்கான மெனுவை ஆரோக்கியமானதாகவும் புதுமையானதாகவும் தயாரித்துக் கொடுக்கலாம். அதற்கு இந்த தால் சப்பாத்தி உதவும்.

**என்ன தேவை?**

கோதுமை மாவு – ஒரு கப்

துவரம்பருப்பு – கால் கப்

சீரகம் – அரை டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கரம் மசாலாத்தூள் – அரைக்கால் டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரைக்கால் டீஸ்பூன்

நெய் அல்லது வெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

துவரம்பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து, குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து பத்து நிமிடங்கள் வேகவிடவும் (பிறகு திறந்து பார்த்து, தண்ணீர் அதிகமாக இருந்தால், அது குறையும் வரை கொதிக்கவிடவும்). அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து கடைந்து அல்லது தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைக்கவும்.

ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து அரைத்த பருப்பு, கரம் மசாலாத்தூள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், ஒரு டீஸ்பூன் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் நன்றாகப் பிசையவும். பின்னர் மாவைச் சப்பாத்தி போல திரட்டி, நெய் அல்லது வெண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.

குழந்தைகளுக்கு விருப்பமான வடிவில் குக்கி கட்டர் வைத்து கட் செய்து சுட்டெடுத்து லஞ்ச் பாக்ஸில் ‘பேக்’ செய்யலாம். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

**சைடிஷ்: ஈஸி சிக்கன் கறி**

ஒரு தக்காளி, ஒரு வெங்காயத்தை நறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரை டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா பவுடர், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு சேர்க்கவும். அரை கிலோ கோழிக்கறியை நன்கு கழுவி சேர்த்து இதனுடன் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 25 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

**குறிப்பு**

சைவ உணவு சாப்பிடுபவர்கள் சிக்கனுக்குப் பதிலாக சோயா சங்க்ஸ் அல்லது பச்சைப் பட்டாணி சேர்த்து செய்யலாம்.

**[நேற்றைய ரெசிப்பி: முட்டை சாதம்](https://www.minnambalam.com/public/2021/11/22/1/egg-rice)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *