நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

public

நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கோரி அகில இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று(அக்டோபர் 27) போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிராக சட்டமசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கக் கோரி, கிண்டி ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கச் செயலாளர் மயூக்பிஸ்வாஷ், தமிழ்நாடு மாநிலத் தலைவர் கண்ணன் மற்றும் மாநிலச் செயலாளர் மாரியப்பன் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற போராட்டத்தில் சென்னை மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நீட் தேர்வை ஒழிக்க வேண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போலீசாரின் தடுப்பு வளையங்களை மீறி சின்னமலை ராஜீவ் காந்தி சிலையிருந்து மாணவர்கள் ஊர்வலமாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் வேனில் ஏற்றி சமுதாயக் கூடத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு மாநிலச் சட்டப் பேரவை நிறைவேற்றியச் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி அகில இந்திய அளவில் மாணவர்கள் நடத்தும் முதல் போராட்டமாகும்.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில்,” நீட் தேர்வை ஒழிக்க கழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை ஒன்றிய அரசு ஏற்க வலியுறுத்தி தேசிய அளவில் போராடும் @SFI_CEC அமைப்புக்கு நன்றி,வாழ்த்து.ஒரு மாநில அரசின் சட்டம் நிறைவேற நாடு முழுவதும் போராட்டம். தமிழ்நாடு மட்டுமல்ல நீட்டை இந்தியாவே எதிர்க்கிறது. மாணவர் லட்சியம் வெல்வது நிச்சயம்” என்று பதிவிட்டுள்ளார்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *