மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 27 அக் 2021

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பொது இடங்களின் கட்டுமானம் அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்றம் வரையிலும் குரல்கள் எழுந்திருக்கின்றன. அரசும் புதிய கட்டுமானங்களில் அதை செய்வதாக அவ்வப்போது சொல்லி வருகிறது. ஆனால், மாற்றுத் திறனாளிகள் பொது இடங்களை பயன்படுத்துவதில் எவ்வளவு சவால்கள் இருக்கின்றன என்பதை மாற்றுத் திறனாளியான கவிஞர் மனுஷ்யபுத்திரன் வேதனையாக பகிர்ந்துகொண்டிருக்கிறார். தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் உறுப்பினரான மனுஷ்யபுத்திரன், மாற்றுத் திறனாளிகள் சமூகத்துக்கான நீதி புறக்கணிக்கப்படுவதை மிகவும் வலியோடு நேற்று (அக்டோபர் 26) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “சென்னையைவிட்டுக் கிளம்பி 24 மணி நேரம் ஆகிறது. கன்னியாகுமரிக்கு படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறேன். பயணம் தொடங்கியதிலிருந்து இந்த நாட்டில் ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவரின் துயரங்கள் எங்கு போனாலும் என்னை தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன. ரயிலில் இருக்கும் கழிவறையை ஒரு சக்கர நாற்காலி உபயோகிப்பவர் எப்படி பயன்படுத்த முடியும் என்று எவ்வாறு யோசித்தாலும் புலப்படவில்லை. அது ஒரு மனிதவிரோதத்தன்மை கொண்ட டிசைன். ரயிலைவிட்டு இறங்கினால் எங்குபோனாலும் படிக்கட்டுகள். சக்கர நாற்காலி நுழையமுடியாத குறுகலான பாதைகள்”என்று ரயில்வே துறையில் மாற்றுத் திறனாளிகளின் அவலம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மனுஷ்யபுத்திரன், “ கன்னியாகுமரியில் ஒரு கடல் பார்த்த உயர்தர விடுதியில் டீலக்ஸ் ரூம் போட்டிருந்தார்கள். செக் இன் செய்துவிட்டு லிஃப்ட்டில் ஏறிய ஒரு நிமிடத்தில் லிஃப்ட் நின்றுவிட்டது. அந்தரத்தில் முக்கால் மணி நேரம் தொங்கினேன். நான்காம் தளத்திற்குச் சென்று அறைக்குள் நுழைந்தால் வேறொரு பிரச்சினை.

டாய்லெட்டிற்குள் வீல் சேர் போகமுடியாதபடி குறுகலான வாயில். கொரோனோ வந்தபோது இந்த துயரத்தை திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுபவித்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக ஒரு மினி வீல் சேரும் கொண்டுவந்திருந்தேன். ஆனால் அத்தோடு என்னை விட்டால் எப்படி? மினி வீல் சேர் உள்ளே போனாலும் டாய்லெட் சிட் அவுட்டிற்கு முன்னால் ஒரு பெரிய படி. என்ன எழவுக்கு அந்தப் படி என்று தெரியவில்லை. அதாவது மினி வீல் சேர் இருந்தாலும் நானாக அந்த படியைக் கடக்கமுடியாது. அந்த ஈவில் ஹோட்டலில் தங்க முடியாது என்று காலிசெய்துவிட்டு வெளியே வந்துவிட்டேன். பக்கத்தில் இருந்த ஒவ்வொரு ஹோட்டலாக தேடி அலைந்தோம். எங்கும் சக்கர நாற்காலி செல்லும் சறுக்குபாதை கிடையாது. டாய்லெட்டில் வீல் சேர் போகாது. ஒருவழியாய் 50 சதவிகிதம் பரவாயில்லை என்று தோன்றிய ஒரு ஹோட்டலில் அக்கடா என்று இடுப்பை சாய்த்திருக்கிறேன்”என்று மனுஷ்யபுத்திரன் குறிப்பிடும்போது ஒரு மாற்றுத் திறனாளியின் உச்சவலி நம்மை பாடாய் படுத்துகிறது.

“நான் புரிந்துகொண்டது, இந்த நாட்டில் பெரும்பாலான இடங்கள் என்னை போன்றவர்களுக்கானதல்ல. அதேபோல ரயில் பெட்டி செய்பவர்கள், வீடு கட்டும், மிகப்பெரிய ஹோட்டல்களைக்கட்டும் எஞ்சினீயர்கள் ஒரு குறைந்தபட்ச சென்சிடிவிட்டிகூட இல்லாதவர்கள். ஒரு சக்கர நாற்காலி உபயோகிக்கும் மனிதன் இந்த இடத்தை உபயோகிக்ககூடும் என யாருக்கும் எந்த உணர்வும் இல்லை என்பதுதான் உண்மை. நியாயமாக இதுபோன்ற ஹோட்டல்களின் லைசென்ஸை அரசு ரத்து செய்யவேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றி எவ்வளவோ பேசுகிறோம். ஆனால் அதற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

நாளை படப்பிடிப்பில் எனக்கு அழுகிற காட்சி எதுவும் இருந்தால் இதையெல்லாம் நினைத்துக்கொண்டால் போதும், கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் வரும். இரண்டு கால்கள் இருப்பவர்கள் தயவு செய்து அதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மிகக்கொடூரமான ஒரு சமூகத்தில் வாழ்கிறீர்கள்”என்று குறிப்பிட்டுள்ளார் மனுஷ்யபுத்திரன்.

மாற்றுத் திறனாளிகளும் இந்த சமூகத்தில் முழு உரிமை கொண்டவர்கள். அவர்கள் பயன்படுத்தும் தகவமைப்பு அனைத்து உட்கட்டமைப்புகளிலும் கட்டாயமாக்கப்படவேண்டும்.

-வேந்தன்

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

புதன் 27 அக் 2021