மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 26 அக் 2021

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

ஏழைகளின் ஊட்டி ‘ஏற்காடு’ என்பதுபோல சேலத்தின் குற்றாலம் ‘முட்டல் அருவி’ ஆகும்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே முல்லைவாடி சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் முட்டல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆணைவாரி என்ற வனப்பகுதியில் உள்ளது முட்டல் அருவி.

அருவி மட்டுமின்றி இங்குள்ள ஏரி மற்றும் வனப்பகுதிகளில் புள்ளிமான், மயில் உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் ஆகியவை உள்ளன. 'சூழல் சுற்றுலா’ என்ற திட்டத்தின் கீழ் இங்கு மூங்கில் குடில் கொண்ட விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

முட்டல் ஏரியில் படகு சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் உண்டு. இதனால் சேலம் மட்டுமின்றி, அதன் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்குப் பருவமழை காலங்களில் வருகை தந்து எழில் கொஞ்சும் முட்டல் அருவியில் குளித்துவிட்டுச் செல்வார்கள்.

ஆனால் இந்த அருவியில் கனமழையின் காரணமாக, திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்படும். இதனால் சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 300க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதையடுத்து அவர்களை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

அதுபோன்று சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் ஆணைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், அருவியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதுபோன்று கடந்த 24 ஆம் தேதி, ஞாயிறு அன்று அருவியில் சுற்றுலாப் பயணிகள் பலர் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டத் தொடங்கியது. இதைக்கண்ட அங்கிருந்த வனத்துறையினர் அருவியில் குளித்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.

சுற்றுலாப் பயணிகள் வெளியேறிக் கொண்டிருக்கும்போது காட்டாற்று வெள்ளம் அதிகரித்து கைக்குழந்தையுடன் ஒரு பெண் உட்பட 5 ஆண்கள் மறுகரையில் சிக்கிக்கொண்டனர்.

தொடர்ந்து வெள்ளம் அதிகரித்ததன் காரணமாக அவர்களால் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்ப முடியவில்லை. இந்த நிலையில் மறுகரையில் சிக்கிய ஆண்கள் இருவர் அங்கிருந்த பாறை மீது ஏறி குழந்தையுடன் அப்பெண்ணைப் பத்திரமாக மீட்டனர்.

முதலில் அக்குழந்தையையும் பெண்ணையும் காப்பாற்றுவதற்காக மேலிருந்து கீழே இறங்கிய இரண்டு இளைஞர்கள், குழந்தையை மட்டும் மீட்டு பாறையின் மேலே நின்றுகொண்டிருந்த இளைஞரிடம் கொடுத்துவிட்டனர். பின்னர் அந்தப் பெண்ணை பத்திரமாகப் பாறைமீது ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ஆனால் உயிரைப் பணையம் வைத்து பெண்ணையும் குழந்தையையும் பத்திரமாகக் காப்பாற்றிய அந்த இளைஞர்கள் இருவர் பாறையின் மீது ஏற முயன்றபோது சறுக்கிக் கீழே விழுந்து காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இது அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருவர் விழுந்துவிட்டனர் என அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டாலும், கொட்டும் வெள்ளத்தால் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் சிறிது தூரம் சென்று அவர்களாகவே கரை ஒதுங்கினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதறவைக்கிறது.

இந்த சூழலில் பாதுகாப்பு கருதி ஆனைவாரி முட்டல் சூழல் சுற்றுலா பூங்கா, ஆத்தூர், கரடியூர் காவேரி பீக் சூழல் சுற்றுலா மையம், ஏற்காடு, வழுக்குப்பாறை சூழல் சுற்றுலா மையம், டேனிஷ்பேட்டை ஆகியவை மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.

-பிரியா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

செவ்வாய் 26 அக் 2021