மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 அக் 2021

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

இந்து சமய அறநிலையத் துறை நிதியின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தை சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்ற நிலையில், புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

அதனின், முதற்கட்டமாக சென்னை கொளத்தூரில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கு அனுமதி அளித்து உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இக்கல்லூரிகள், தற்காலிகமாக தனியார் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் கீழ் சென்னை கொளத்தூரில் இயங்கும் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், காவலர், தூய்மைப்பணியாளர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்று அக்டோபர் 13 ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மற்ற மதத்தினர் யாரும் கலந்து கொள்ள தகுதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது பெரிய சர்ச்சையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும், கடந்த 21ஆம் தேதி கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில் முதல்வர் மற்றும் ஆசிரியர்களாக பணிபுரிய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதை எதிர்த்து சென்னையை சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சுஹைல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், தாய் மொழியை தமிழாக கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது. இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 16 மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது.

அதனால், அந்த அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதனை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில், புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று(அக்டோபர் 22) நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், "நியமன நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இந்து அறநிலையத்துறை நிதி மூலம் நடத்தக்கூடிய நிறுவனங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும் என்று விதி உள்ளது. அதன் அடிப்படையில் நியமனம் நடந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இந்த சட்டப்பிரிவு துறை ஊழியர்களை நியமிக்கும்போதுதான் பொருந்தும். அது நடத்தும் கல்வி நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அல்ல என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இதில் விரிவான ஆலோசனை தேவை என்பதால் இவ்வழக்கு குறித்து தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

-வினிதா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

சனி 23 அக் 2021