மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 அக் 2021

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சீனாவிடமிருந்து கடன் பெற்றது போதாதென்று, இப்போது இந்தியாவிடமும் கடன்கேட்கத் தொடங்கிவிட்டது இலங்கை. நான்கு பக்கமும் கடல் சூழ்ந்திருக்கும் இலங்கைத் தீவை, இப்போது கடன் சூழ்ந்திருக்கிறது. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இந்த ஆண்டு சந்தித்திருப்பதாக, இலங்கை அரசே அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இலங்கையின் இந்த நிலைக்கு காரணம் கொரோனா என்றே அரசுத் தரப்பிலும், பொதுவாகவும் கூறப்படுகிறது. அது உண்மை என்றாலும்கூட அதுமட்டுமே காரணம் அல்ல. கொரோனா தாக்கத்தால் இலங்கைப் பொருளாதாரத்தின் முதன்மைப் பங்கு சக்தியும், அந்நிய செலாவணி ஈட்டித்தரும் முக்கியத் துறையான சுற்றுலாத் துறை முற்றிலுமாக முடங்கிப் போனது. விமான, கப்பல் போக்குவரத்தும் பெருமளவு குறைந்தது. எல்லா நாடுகளையும்போல மக்களின் இயல்பு வாழ்க்கை இலங்கையிலும் பாதிப்படைந்தது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் அதிகம் சரிவடைந்தது என்றாலும் கொரோனா தாக்கத்துக்கு முன்பே இலங்கை அரசு கடன் நெருக்கடியை நோக்கிச்சென்று கொண்டிருந்தன. அதற்கு முதன்மை காரணம் சீனாவின் கடன் வலையில் இலங்கை சிக்கியதுதான்.

அதேபோல், 2014ஆம் ஆண்டு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கான திட்டத்தை அதிபர் ராஜபக்‌ஷே சீன அரசுடன் ஏற்படுத்திக்கொண்டார். இது இலங்கைத்தீவில் சீனாவின் மிகப்பெரியத் திட்டமாகக் கருதப்பட்டது. அடுத்தடுத்த ஆட்சி மாற்றத்தால் அந்தத் திட்டம் செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. 2020இல் மீண்டும் ராஜபக்‌ஷே ஆட்சி ஏற்பட்டது. அதேவேளை தொடர்ந்து சரிந்துவந்த இலங்கைப் பொருளாதாரம், 2020ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்தப் பொருளாதாரத்தில் 80 சதவிகிதம் கடனாக மாறியது. விளைவு, அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போலவே கொழும்புத் துறைமுக நகரமும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு சீனாவிடம் கைமாறியது.

இப்படி சீனாவிடம் வாங்கிய அடைக்கமுடியாத கடன் ஒருபுறமிக்க, மற்றொருபுறம் இலங்கை அரசின் நிர்வாகத் தோல்வியும் காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, அரசியல் லாபத்துக்காக, பல்வேறு துறையினருக்கும் மானியங்களை வாரி வழங்கியது, இறக்குமதியை கணிசமாகக் குறைத்தது போன்ற நடவடிக்கைகள் அரசு கஜானாவை காலி செய்ய வைத்தது.

முக்கியமாக, செயற்கை உரங்களுக்குத் தடைவிதித்து, முன் அனுபவம், சரியான திட்டமிடல் இல்லாமல் திடீரென இயற்கை விவசாயத்துக்கு மாற வழிசெய்யும் இயற்கை விவசாயக்கொள்கைக்கு உத்தரவிட்டதால், இலங்கையின் உள்நாட்டு உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்தது. இதுதவிர, வெளிநாட்டு வங்கி, நிறுவனங்களிலிருந்து இலங்கை அரசு வாங்கிய கடனும் அடங்கியிருக்கிறது. இதுபோன்ற காரணங்களால், மேலும் மேலும் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட இலங்கை அரசாங்கம், கடனை கட்டுப்படுத்துவதற்கு வழியில்லாமல், இன்னும் அதிகமான கடனை வாங்கிக் குவித்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தற்போது இலங்கை அரசாங்கம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியாவிடம் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலரை (ரூ.3,750 கோடி) கடனாகக் கேட்டிருக்கிறது. இதற்காக, இலங்கை கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக, சிலோன் பெட்ரோலிய கழகத்தின் தலைவர் சுமித் விஜேசிங்கே தெரிவித்திருக்கிறார்.

-ராஜ்

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

வெள்ளி 22 அக் 2021