மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 அக் 2021

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

ஓடிபி மூலம் மர்ம நபர்களால் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டால், அதுகுறித்து புகார் தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் ஒன்றை திருச்சி சைபர் க்ரைம் போலீஸ் வெளியிட்டுள்ளது.

தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரித்துள்ள நிலையில், அதுதொடர்பான மோசடிகளும் அதிகரித்துள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களைக் கேட்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடி வந்தனர். தற்போது, வாடிக்கையாளர் கேஒய்சி சரிபார்ப்பு என்ற பெயரில் வங்கியிலிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கேஒய்சியைப் புதுப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட நபருக்கு எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்அப் மேசேஜ் அனுப்பப்படுகிறது. அதனுடன், ஒரு லிங்க்கும் அனுப்பப்படுகிறது. அதில், வங்கியின் இணையதளம் போன்ற போலி இணையதளம் திறக்கும். அதில் பயனர் பெயர், பாஸ்வேர்டு, கேப்ட்சா உறுதிப்படுத்தல் போன்ற வங்கி விவரங்களை வழங்குமாறு கேட்கும். இறுதியில் மொபைலில் பெறப்பட்ட ஓடிபியை வழங்கும்படி கேட்கும். அப்படி ஓடிபியைப் பதிவிட்டு சமர்ப்பிக்கும்போது, வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் சிக்கி, தங்களின் பணத்தை இழக்காமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று காவல் துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ஓடிபி மூலம் பணம் திருடப்பட்டால், அதுகுறித்து 155260 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம்.

பண மோசடி நடந்த 24 மணி நேரத்துக்குள் இந்த ஹெல்ப் லைன் எண்ணுக்கு அழைத்தால், அதன் மூலம் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு ப்ரீஸ் (Freeze) செய்து தடுக்கப்படும்.

அதுமட்டுமில்லாமல், வேறு ஏதேனும் சைபர் க்ரைம் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு நேரில் வராமலேயே இணையதளத்திலேயே புகார் அளிக்கலாம். மேலும் 9384501999 என்ற போலீஸ் வாட்ஸ்அப் குழுவிலும் மக்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் என்றும் திருச்சி சைபர் க்ரைம் போலீஸ் தெரிவித்துள்ளது.

-வினிதா

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 20 அக் 2021