21 நாட்கள் போராட்டத்துக்கு முடிவு: சிக்கியது டி23 புலி!

public

21 நாட்களாக வனத்துறைக்குப் போக்கு காட்டி வந்த டி23 புலி இன்று பிடிபட்டது.

தமிழகம் முழுவதும் புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும் போது அவற்றுக்கு எண்கள் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் உலாவும் புலிகளில் ஒன்றுக்கு டி23 என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த புலி மசினகுடி பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும், 4 மனிதர்களையும் அடித்துக் கொன்றது. கடந்த ஆண்டு கௌரி என்ற பெண்ணை அடித்துக் கொன்றது. பின்னர் கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரை அடித்துக் கொன்றது.

தொடர்ந்து, சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை இந்த புலி அடித்துக் கொன்றதோடு, அவருடைய பாதி உடல் பாகத்தையும் தின்றுவிட்டது.

இதனால் கொந்தளிப்பான மசினகுடி, கூடலூர் பகுதி மக்கள் புலியை வனத்துறை பிடிக்க வேண்டும் இல்லை என்றால், நாங்களே காட்டுக்குள் சென்று வேட்டையாடி பிடிப்போம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து புலியை வேட்டையாடி பிடிக்க வனத்துறை உத்தரவிட்டது. இதனால் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி முதல் புலியைத் தேடும் பணி தொடங்கியது.

இதனிடையே புலியைச் சுட்டுப் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து நொய்டாவைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா தோக்ரே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் புலியை உயிருடன் பிடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து டி23 புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் போராடி வந்தனர்.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வனத்துறையினர், மருத்துவ குழுவினர், அதிரடிப்படையினர் என பலரும் புலியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த தேடுதல் வேட்டையில் உதயன், சீனிவாசன் ஆகிய கும்கி யானைகளும், அதவை, ராணா ஆகிய மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் இந்த புலி பிடிபடாமல் வனத்துறையினருக்குப் போக்கு காட்டி வந்தது.

ஒருவேளை புலி இறந்திருக்கலாம் என்றும் கூட சொல்லப்பட்டது. ஆனால் ஓம்பெட்டா வனப்பகுதியில் புலி இருப்பது தெரியவந்ததை அடுத்துக் கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் மீண்டும் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் புலி ஒன்று சாலையைக் கடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இரவு 10 மணியளவில் வனத்துறையினரின் மருத்துவக் குழு அந்த இடத்திற்குச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டது. அப்போது டி23 புலி தென்பட்டதை அடுத்து அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. எனினும் புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால் அதனைப் பிடிக்க முடியவில்லை.

ஆனால் இன்றுக்குள் புலியை வனத்துறையினர் பிடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் புலி பிடிபட்டது. இன்று மதியம் புலி மாயார் பகுதியில் நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் அந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள புதரில் புலி பதுங்கி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து புதரை சுற்றிவளைத்த வனத்துறையினர், புலி வெளியில் வரும் வரை காத்திருந்தனர். பின்னர் புலி வெளியே வந்ததும், அதற்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

மயங்கிய புலியை வலை வைத்துக் கட்டி தூக்கிச் சென்று கூண்டில் அடைத்தனர்.

இந்தப் புலிக்குச் சிகிச்சை அளித்து சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்துப் பராமரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ஏற்கனவே 3 ஆட்கொல்லி புலி நீலகிரி பகுதியில் சுட்டுப்பிடிக்கப்பட்டது. டி 23 புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் போராடினர். ஆனால் நீதிமன்ற உத்தரவை அடுத்து புலியை உயிருடன் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் புலிகளைப் பிடிக்கப் பயிற்சி பெற்ற வனத்துறை, கர்நாடக வனத்துறையினர் உட்பட 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் மிகுந்த சிரத்தையுடன் பணியாற்றி இதைச் சாத்தியப்படுத்தி உள்ளனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் வைத்து இது பராமரிக்கப்படும்” என்று கூறினார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *