மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 அக் 2021

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

சிதம்பரம் அரசு நந்தனார் பள்ளி மாணவரைக் கடுமையாகத் தாக்கிய ஆசிரியர் சுப்ரமணியன் கைது செய்யப்பட்டு நேற்று இரவு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நந்தனார் ஆண்கள் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகச் சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், தனது வகுப்பை கட் அடித்த மாணவர்களைக் கடுமையாக அடித்து காலால் உதைக்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ஆசிரியர் தாக்கியதில் சஞ்சாய் என்ற மாணவர் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவர்களை ஆசிரியர் பிரம்பால் மட்டுமின்றி காலால் உதைத்துத் தாக்கும் காட்சிகள் பெற்றோர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை அதிகரித்தது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரிடம் வாக்குமூலம் பெற்ற போலீஸார் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரைத் தேடி வந்தனர்.

டிஐஜி பாண்டியன், ‘சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னர் ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டதன் பேரில் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஆசிரியரின் வீடு உள்ளிட்ட இடங்களில் தேடினர்.

இதையடுத்து டிஎஸ்பி ரமேஷ் ராஜ் ஆசிரியரின் கால் டீடெயில் மற்றும் அவரது சிம் கார்டு மூலம் எங்கிருக்கிறார் என லொக்கேஷனை ஆராய்ந்துள்ளார். அப்போது அவர் பயன்படுத்தியது ஜியோ சிம் என்பது தெரியவந்துள்ளது. அதனை வைத்து ஆசிரியர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “ஆசிரியர் செல்பேசி எண் மூலம் அவர் இடத்தை கண்டறிந்தோம். ஜியோ சிம்மை பொறுத்தவரை அந்த சிம் எவ்விடத்திலிருந்து இயங்குகிறது என கச்சிதமாகத் தெரிந்துவிடும்.

இந்நிலையில் ஆசிரியர் பயன்படுத்திய ஜியோ சிம், சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் லாட்ஜ் பகுதியில் இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாட்ஜில் இருக்கலாம் என சந்தேகித்து அங்கு சென்று விசாரித்ததில் ஆசிரியர் தனது பெயரிலே ரூம் எடுத்துத் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று கைது செய்தோம்.

அவரிடம் விசாரித்ததில், நான் எதுவும் தவறு செய்யவில்லை என்று சொன்னார். கல்வித் துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்ததால், தலைமறைவான ஆசிரியர் லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கியிருக்கிறார்.

நேற்று மாலை அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து, சிதம்பரம் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். நீதிமன்ற உத்தரவையடுத்து இரவு 11 மணியளவில் அவர் சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்” என்றனர்.

-பிரியா

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் வாக்குவாதம்: யார் மீது தவறு?

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

4 நிமிட வாசிப்பு

மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: எங்கெங்கு கன மழை?

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

2 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ஆட்டோ பதிவுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி!

வெள்ளி 15 அக் 2021