மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 அக் 2021

புளியந்தோப்பு குடியிருப்பை சரிசெய்ய 45 நாள் கெடு!

புளியந்தோப்பு குடியிருப்பை சரிசெய்ய 45 நாள் கெடு!

சென்னையில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் உள்ள குறைபாடுகளை 45 நாள்களுக்குள் சரிசெய்ய கட்டுமான நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சென்னை புளியந்தோப்பு கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பு தரமற்ற முறையில் இருப்பதாகவும், கட்டடத்தில் பல இடங்களில் தொட்டாலே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுகின்றன என்றும் அங்கு குடியிருக்கும் மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், இதில் முறைகேடு நடந்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதுதொடர்பாக நடந்து முடிந்த சட்டப்பேரவையில் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் கொண்டு வந்தார்.

தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட குடியிருப்பிற்கான குடிசை மாற்று வாரியத்தின் உதவிப் பொறியாளர் பாண்டியன் மற்றும் உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகிய இரண்டு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், குடியிருப்பு கட்டிடத்தின் தரத்தை ஆய்வு மேற்கொள்ள ஐஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இக்குழு கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் இறுதி அறிக்கையை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குனர் கோவிந்திராவிடம் தாக்கல் செய்தது. பின்னர், இந்த அறிக்கை தமிழ்நாடு முதல்வரிடம் சமர்பிக்கப்பட்டது.

அதில், தரமற்ற வகையில் குடியிருப்பை கட்டிய பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அரசு ஒப்பந்தங்களில் சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,ஐஐடி நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில்,தரமற்ற முறையில் கட்டப்பட்ட கே.பி.பார்க் குடியிருப்பில் உள்ள குறைகளை 45 நாட்களுக்குள் சரிசெய்து கொடுக்க பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, மீண்டும் சிமெண்ட் பூச்சு வேலை செய்யவும், உடைந்த நிலையில் இருக்கும் கழிவறைகளில் உள்ள பழைய பீங்கான்களைப் பெயர்த்து எடுத்து புதிய பீங்கான்கள், கோப்பைகளை பதிக்கவும், தண்ணீர் குழாய்களை சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

45 நாட்களுக்குள் இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், மீண்டும் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்து, கட்டடத்தின் ஸ்திரத்தன்மை குறித்து தமிழ்நாடு அரசுக்கு தெரிவிப்பார்கள். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவரும்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 14 அக் 2021