மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 அக் 2021

கோயில் நகைகளை உருக்குவது புதிதல்ல: தமிழ்நாடு அரசு!

கோயில் நகைகளை உருக்குவது புதிதல்ல: தமிழ்நாடு அரசு!

கோயில்களில் உள்ள நகைகள் 1977ஆம் ஆண்டு முதல் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 47 கோயில்களில் முதற்கட்டமாக பக்தர்கள் வழங்கிய நகைகள் தங்கக்கட்டிகளாக மாற்றப்படும். கடந்த பத்தாண்டு காலத்தில் கோயிலுக்குக் காணிக்கையாக வந்த நகைகளில் தேவைப்படாதவற்றை மட்டுமே உருக்க போகிறோம். அதன்மூலம் வரும் பணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

இந்து சமய அறநிலையத் துறையின் இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (அக்டோபர் 12) நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கோயில்களில் என்னென்ன நகைகள் உள்ளது என்பது குறித்த பதிவேடுகள் இல்லாததால் நகைகளை உருக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், கோயில்களில் புராதன நகைகள் எவை என்பது குறித்தும், கோயிலுக்கு தேவையான நகைகள் எது என்பது குறித்தும் கண்டறிய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 38 கோயில்களில் 2,137 கிலோ தங்கத்தை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகவும், நகைகளை தணிக்கை செய்யாமல் உருக்கக் கூடாது என வாதிடப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், 1977ஆம் ஆண்டு முதல் கோயில் நகைகள் உருக்கப்பட்டு வருவதாகவும், ஐந்து லட்சம் கிலோ நகைகள் ஏற்கனவே உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ததன் மூலம் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வட்டி வருவாய் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், நகைகளைத் தணிக்கை செய்ய ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியவர், இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி இயற்றப்பட்ட அரசாணையையும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, அரசாணை குறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு அனுமதியளித்த நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

புதன் 13 அக் 2021