மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 அக் 2021

விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம்: அதிலேயே தூக்கிட்டுக்கொண்டது ஏன்?

விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம்: அதிலேயே தூக்கிட்டுக்கொண்டது ஏன்?

தனது நிலத்தில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாததால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், உயர்மின் கோபுரம் மீது ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள வளத்தியை அடுத்த கலிங்கமலை கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயது மணி . அரியலூர் - வடசென்னை வரை உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணி தனியார் நிறுவனம் மூலமாக நடைபெற்று வருவதில் மணி என்பவருக்குச் சொந்தமான சுமார் நான்கு ஏக்கர் நிலத்தில் 38 சென்ட் நிலம் வரை இப்பணிக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி 90 சதவிகிதம் நிறைவடையும் நிலையில், இழப்பீடாகத் தருவதாகக் கூறிய தொகையில் பெரும் தொகையை அந்தத் தனியார் நிறுவனம் விவசாயிக்குத் தராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மீதி தொகை தொடர்பாக அந்தத் தனியார் நிறுவன ஊழியர்களிடம் விவசாயி மணி கேட்டபோது, அந்த அதிகாரிகள் முரணான பதில்களைத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் மனம் உடைந்த மணி 180 அடி உயரம் கொண்ட உயர்மின் கோபுரம் மீது ஏறி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், மணியின் குடும்பத்துக்கு நியாயம் வேண்டி அவரது உடலை கீழே இறக்கவிடாமல், செஞ்சி - சேத்துப்பட்டு சாலையில் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு வந்த வளத்தி காவல்நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேல்மலையனூர் தீயணைப்புத் துறையினரோ, மணியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் திண்டிவனம் துணை ஆட்சியர் அமித் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தையும் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம். “இதுபோன்ற உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும்போது, பாதிக்கப்படும் நிலங்கள், பயிர்கள், வெட்டப்படும் மரங்கள் போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே அரசு ஆணை பிறப்பித்துள்ளது. திறந்தவெளி கிணறுகளுக்கு மட்டும் எந்த இழப்பீடும் அரசு அறிவிக்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட கிணறுகளுக்கு இழப்பீடு வர வேண்டியிருக்கிறது.

உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும்போது நிலத்தின் சந்தை மதிப்பும் குறைகிறது. அதனால் திறந்தவெளி கிணறுகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டி தொடர்ந்து கேட்டு வருகிறோம். அரசின் அரசாணைப்படி, பாதிக்கப்படும் நிலங்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனம் தரவில்லை. பொதுவாக, உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் திட்டமானது தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தால்தான் நடக்கிறது. ஆனால், தனியார் நிறுவனம் ஒப்பந்தம் அடிப்படையில் கான்ட்ராக்ட் எடுத்து இதைச் செய்கிறார்கள்.

அவர்கள் சொன்னபடி, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு தரவில்லை. 'பணத்தைத் தராமல் வேலை செய்யக் கூடாது' என்று அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறோம். சில இடங்களில் பணியை நிறுத்தியுள்ளோம். அதன்படி மணி என்பவருக்கும் 10 லட்சம் ரூபாய் வர வேண்டி இருந்துள்ளது. அதில் 1 லட்சம் ரூபாய் மட்டுமே ஏற்கெனவே கொடுத்துள்ளனர். மீதி தொகையை தராமல் இருக்கவே அதைச் சம்பவத்தன்று மணி கேட்டுள்ளார். அப்போது, 'எங்க வேணாலும் போய் பார்த்துக்கோங்க. நாங்க வேலை செய்வோம். ஏற்கெனவே கொடுத்ததுதான். இதுக்கு மேல தர முடியாது' என்றும் அவமரியாதையாகவும் அந்த அதிகாரிகள் பேசியுள்ளார்கள்.

அதனால் மனமுடைந்த அந்த விவசாயி அவரது நிலத்திலேயே உள்ள அந்த உயர்மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் குடும்பத்துக்கு நீதி கேட்டு சாலை மறியல் நடந்தது. அரசு அதிகாரிகளின் சமாதானத்தைத் தொடர்ந்து செஞ்சியில் பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் செஞ்சி மஸ்தான், அரசு அதிகாரிகள், கட்சித் தோழர்கள், கிராம மக்கள் எனப் பலரும் பங்கு கொண்டனர்.

தொகுதி அமைச்சரே இந்தப் பிரச்னைக்கு முன்நின்றதை வரவேற்கிறோம். நிலத்துக்காக ஏற்கெனவே தர வேண்டிய இழப்பீடு இன்றி, தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடாகத் தரப்பட்டுள்ளது. அதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கும் சேர வேண்டிய தொகையைத் தரும்வரை அப்பணியைத் தொடங்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த உயர்மின் கோபுரம் அமைக்கப்படுவதில் 13 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இதே பிரச்னைக்காக, கடந்த ஆட்சியின் போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே ஒரு விவசாயி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் அருகே ஒரு விவசாயியும் உயிரிழந்திருக்கிறார். அந்த ஆட்சியில் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் தரவில்லை.

அதே போன்ற பிரச்னையில்தான் தற்போது மூன்றாவது விவசாயி இறந்துள்ளார். உயர் மின் கோபுரம் அமைக்கும் பிரச்னை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி தமிழக மின்துறை அமைச்சரை விவசாய சங்கம் சார்பில் சந்தித்து பேசியிருந்தோம். அதேபோல், ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல்வரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசுதான் இதற்கெல்லாம் பொறுப்பு. அரசு துரித நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தத் தற்கொலை நடந்து இருக்காது” என்றார்.

இதுகுறித்து, வளத்தி காவல்துறையினர், “நேற்று செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இழப்பீடு குடும்பத்தாருக்கு தரப்பட்டுள்ளது. விவசாயி இறந்தது தொடர்பாக 174ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்கின்றனர்.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

புதன் 13 அக் 2021