மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 அக் 2021

தரமற்ற ஜவ்வரிசியை விற்றால் கடும் நடவடிக்கை: அரசின் எச்சரிக்கை!

தரமற்ற ஜவ்வரிசியை விற்றால் கடும் நடவடிக்கை: அரசின் எச்சரிக்கை!

விதிகளுக்குட்பட்டு உரியத் தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி விற்கப்படுவதாகப் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில்,” ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஜவ்வரிசி உற்பத்திக்காக பலவிதமான வேதிப்பொருட்களை கலந்து கலப்பட ஜவ்வரிசியை பலர் விற்பனை செய்வதால், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்பவர்களும், இயற்கையாக அதனை உற்பத்தி செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜவ்வரிசி உற்பத்திக்கு வேதிப்பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. 2015ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் ஜவ்வரிசி உற்பத்தி தொடர்பாகவும், கலப்படத்தை தடுக்கவும் நீதிமன்றம் பல உத்தரவுகளை வழங்கியது. உணவுத்துறையினர் ஈரப்பதத்துடன் இருக்கும் மரவள்ளி கிழங்கு மூலம் தான் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு கலப்பட ஜவ்வரிசி செய்வதாகக் கூறி அதனை விற்பனை செய்வதற்கு தடை விதித்ததோடு, அதை வைத்திருக்கும் ஆலைகளையும் சீல் வைத்தனர். ஆனால் கலப்படம் தடுக்கப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஜவ்வரசி மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி 9 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 3 வகையான ஜவ்வரிசி பாக்கெட்டுகளை நீதிமன்றத்திற்கு வாங்கி வர செய்த நீதிபதி,அதை உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் வழங்கி, இந்த மாதிரிகளை கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்து கலப்படம் உள்ளதா என்பது குறித்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று(அக்டோபர் 13) மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கொடுத்தனுப்பிய ஜவ்வரிசி மாதிரிகளின் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது. அதில், இரு மாதிரிகள் தரமானதாகவும், ஒரு மாதிரி மட்டுமே சற்று வித்தியாசமாகவும் உள்ளது. ஆனால், இது நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், விதிகளுக்குட்பட்டு உரியத் தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி விற்கப்படுவதாகப் புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் பல சுற்றறிக்கைகள் பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி தடையை மீறி ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி விற்கப்பட்டால், உரிய அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

-வினிதா

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

புதன் 13 அக் 2021