மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 10 அக் 2021

ஒரு மாணவர்கூட சேராத 72 பொறியியல் கல்லூரிகள்!

ஒரு மாணவர்கூட சேராத 72 பொறியியல் கல்லூரிகள்!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதில் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேர விருப்பம் தெரிவிக்கவில்லை என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 31 கல்லூரிகளில் ஒரு சதவிகிதத்துக்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு பொறியியல் படிப்பை மாணவர்கள் அதிக அளவில் விரும்பி தேர்ந்தெடுத்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் ஆங்காங்கே முளைத்தன. ஆனால் படித்து வெளியேறியவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாதது, அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படித்தது போன்ற பல காரணங்களால் பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்களுக்குக் குறையத்தொடங்கியது.

ஒவ்வொரு வருடமும் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியது. இதனால் 2017-18ஆம் ஆண்டில் மட்டும் 50 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் மூடப்பட்டன. கடந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லாமல் இருந்த 20 கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்க விரும்பவில்லை எனவும் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன. ஒரு காலத்தில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வந்த நிலை மாறி சமீப ஆண்டுகளாக கல்லூரிகள் மூடப்படுவது அதிகரித்து வருகிறது.

2021 -22ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் 440 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 51 870 இடங்களில் அரசு ஒதுக்கீட்டு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டு 460 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு 440 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய் தொற்றின் தாக்கம் காரணமாக மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது என்று சொல்லப்பட்டாலும் முக்கியமான கல்லூரிகளில் பெருவாரியான இடங்கள் நிரம்பியுள்ளன. மோசமான, அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினாலேயே பல கல்லூரிகளை மாணவர்களும், பெற்றோர்களும் புறக்கணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 10 அக் 2021