மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 அக் 2021

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்!

அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்!

சென்னை, புழல் அருகே மாநகர பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்லைக் கொண்டு எறிந்து உடைத்த கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. படிக்கட்டில் தொங்கியபடியே பயணிப்பது, பேருந்தின் மேற்கூரையில் ஏறுவது, ஓடும் பேருந்தில் வந்து ஏறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதை மாணவர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டும், இதுபோன்ற செயல்கள் குறைந்தபாடில்லை. இதை கண்டிக்கும் பேருந்து நடத்துநர், ஓட்டுநர்களையும் மாணவர்கள் மதிப்பதில்லை.

இந்நிலையில், இன்று(அக்டோபர் 8) காலை 9 மணியளவில் செங்குன்றத்தில் இருந்து 114 என்ற எண் கொண்ட மாநகர பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஓட்டுநராக சுயாட்சி என்பவரும், நடத்துனராக சிவா என்பவரும் பணிபுரிந்தனர். பஸ் செங்குன்றத்தில் இருந்து புழல் கேம்ப் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, அங்கிருந்து மாதவரம் நோக்கி சென்ற போது அதில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஏறினார்கள். ஏறியவர்கள் உள்ளே வராமல், படிக்கட்டிலேயே தொங்கி கொண்டு பயணம் செய்துள்ளனர். அந்த மாணவர்களை உள்ளே வந்து இருக்கையில் உட்காருமாறு நடத்துனர் சிவா கூறியுள்ளார்.

அவர் கூறியதை கொஞ்சமும் பொருட்படுத்தாத மாணவர்கள் கதிர்வேடு சாலை சிக்னலில் பேருந்தின் மேற்கூரையில் ஏற முயற்சி செய்தனர். இதை பார்த்த ஓட்டுனரும் நடத்துனரும் கீழே இறங்குமாறு கூறி கண்டித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த கல்லூரி மாணவர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்லைக் கொண்டு எறிந்து உடைத்துவிட்டு, அங்கிருந்து ஓடிவிட்டனர்.

நல்லவேளையாக, பயணிகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. இதுகுறித்து ஓட்டுநர் சுயாட்சி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள புழல் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ், கல்லூரி மாணவர்களை தேடி வருகிறார்.

இதுகுறித்து மாநகர பேருந்து ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், ”இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதல் முறை கிடையாது. படிக்கட்டில் நின்று கொண்டு பயணிக்க வேண்டாம் என்று எத்தனை தடவை சொன்னாலும் இவர்களை போன்றவர்கள் கேட்பதில்லை. அறிவுரை கூறும் பேருந்து ஓட்டுநர்களையும், பயணிகளையும் தரக் குறைவாக பேசுவார்கள். இவ்வாறு படிக்கட்டில் பயணிப்பதால் அசம்பாவிதம் ஏதும் நடந்தால், அதற்கும் நாங்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இதனால் எங்களுக்குதான் மன உளைச்சல் ஏற்படுகிறது. இவர்களை போன்ற கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பயணிக்கும் வழிதடத்தில் பேருந்து ஓட்டும் ஓட்டுநர்களுக்கு நிம்மதியே இருக்காது” என்று கூறினார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 8 அக் 2021