மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

கப்பல் கட்டணம் நான்கு மடங்கு உயர்வு: ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு!

கப்பல் கட்டணம் நான்கு மடங்கு உயர்வு:  ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு!

கப்பலில் சரக்கு கட்டணம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால் கரூரில் ஜவுளி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி, கொசுவலை தயாரிப்பு, பஸ் பாடி கூண்டு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு அந்நிய செலவாணியை அதிக அளவில் ஈட்டி தரும் நகரமாக கரூர் உள்ளது.

இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்று பயன்பெற்று வருகின்றனர். இதில் முக்கிய பங்கு வகிப்பது ஜவுளி ஏற்றுமதி தொழில். ஜவுளித் தொழிலைப் பொறுத்தவரை கரூரில் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

கரூரில் இருந்து உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பிகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கிருந்து வீட்டு உபயோக ஜவுளிகளான ஸ்கிரீன்கள், தலையணை உறைகள், மேஜை விரிப்புகள், சோபா விரிப்புகள், துண்டு உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

உள்நாட்டு வர்த்தகத்தைவிட கரூரில் வெளிநாட்டு வர்த்தகம்தான் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில், உற்பத்தி பொருட்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கப்பல் போக்குவரத்தும் ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் சமீபகாலமாக 400 சதவிகிதம் வரை கட்டணங்களை உயர்த்தி உள்ளது. இதனால் கரூரில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் கவலையடைந்து உள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள், "சரக்குகளை கையாள்வதில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச அளவில் சரக்கு கப்பல் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி உள்ளன.

கரூரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி பொருட்களை சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக கப்பலில் பல்வேறு நாடுகளுக்கு ஜவுளிகள் அனுப்பப்பட்டு வருகிறது.

இதில் 40 அடி நீளம் உள்ள ஒரு கன்டெய்னரில் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பொருட்களை அனுப்பி வைக்க 3,000 டாலரில் இருந்து 15,000 டாலராகவும், ஐரோப்பிய நாடுகளுக்கு 2,000 டாலரில் இருந்து 8,000 டாலராகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது நான்கு மடங்கு உயர்வாகும். இதற்கு முன்னர் ஏற்றுமதி செலவை வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏற்றுக்கொண்டனர். தற்போது ஏற்பட்டுள்ள கட்டண உயர்வால் ஏற்றுமதி செலவை அவர்கள் ஏற்க மறுத்து வருகின்றனர்.

இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக அளவு வர்த்தக இழப்பை சந்திக்க நேரிடுவதோடு, நாட்டுக்கு வரும் அந்நிய செலவாணியும் இதன் மூலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 7 அக் 2021