மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

தொடர் மழை: தமிழக அணைகளில் அதிகரிக்கும் நீர்வரத்து!

தொடர் மழை:  தமிழக அணைகளில் அதிகரிக்கும்  நீர்வரத்து!

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வங்கக்கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மேலச்செவல், பத்தமடை, கங்கணான்குளம், காருக்குறிச்சி, வீரவநல்லூர் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

குமரி மாவட்டத்தில் சிற்றார்-1 அணைப்பகுதியில் 7 செ.மீ. அளவுக்கு மழை பதிவானது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டது. மலையோர பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், நேற்று படகு சவாரி நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், சத்தி, கோபி பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அந்தியூர் புதுப்பாளையம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான இறுதி கட்டத்தில் தற்போது இருக்கிறது. அதனைத்தொடர்ந்து தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் அதிக மழையைப் பெறக்கூடிய வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக அக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 74.42 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மேலும் உயர்ந்து 75.04 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய அணை என்ற பெருமையும் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 102 அடியை எட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பாபநாசம், மணிமுத்தாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 7 அக் 2021