மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

ஆயுதபூஜைக்கு சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜைக்கு சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

வருகிற 14 மற்றும் 15ஆம் தேதிகளில் ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களும் வார இறுதி நாட்கள். திங்கள் கிழமை மட்டுமே வேலைநாளாகும். மீண்டும் செவ்வாய்கிழமை மிலாடி நபி பண்டிகை வருகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை வருவதால், திங்கள்கிழமையும் லீவு போட்டுவிட்டு, மொத்தமாக 6 நாட்கள் வரை லீவு எடுத்துக் கொள்ளலாம் என்று பலரும் திட்டமிட்டுள்ளனர். அதனால் சென்னையில் இருக்கும் மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 13ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து புறப்படவுள்ளனர். தொடர்விடுமுறை காரணமாக ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படும்.

இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று(அக்டோபர் 7) வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்காக வருகின்ற ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய நாட்களில் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சிக்கு இயக்கப்படும். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயிலுக்குப் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரத்துக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதிக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, சேலம், புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், கோயம்பத்தூர், பெங்களூரு ஆகிய மாவட்டங்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படும்.

எனவே, பயணிகள் மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள் மாநகர் போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும். பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பயணம் மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 7 அக் 2021