மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 அக் 2021

தடுப்பூசி போட தயக்கம் காட்டும் 7% பேர்!

தடுப்பூசி போட தயக்கம் காட்டும் 7% பேர்!

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7 சதவிகிதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான ஆயுதமாகக் கருதப்படும் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் ஜனவரி மாதத்தில் இருந்து போடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை, மாறாக ஓடி ஒளிந்தனர். இதையடுத்து ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்பட்டது. கிட்டதட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும் , இன்னும் சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டிகொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்களிடம், அதற்கான காரணத்தை அறியவும், அவர்கள் எப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளவும் ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ என்ற சமூக ஊடகம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இதில் 301 மாவட்டங்களில் 12,810 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 67 சதவிகிதம் பேர் ஆண்கள், 33 சதவிகிதம் பேர் பெண்கள்.

இந்த ஆய்வு குறித்து லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் சச்சின் தபரியா கூறுகையில், “இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தபோது, அதை போடுவதற்கு 60 சதவிகிதம் பேர் தயக்கம் காட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், தடுப்பூசி மீதான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் பெரும் சேதத்தை உருவாக்கிய இரண்டாவது அலை போன்ற காரணங்களால் தடுப்பூசி மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது. தற்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தற்போதைய மற்றும் எதிர்கால உருமாறிய தொற்றுகளை தடுப்பதற்கு, தற்போதைய தடுப்பூசிகள் செயல்திறன் உள்ளதாக இல்லை என நினைக்கும் 27 சதவிகிதத்தினர் தடுப்பூசி போடுவதற்கு இதுவரை திட்டமிடவில்லை. ஒருவேளை, தற்போதைய தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்த கூடுதல் தகவல்கள் மற்றும் வீரியமிக்க வேறு தடுப்பூசிகள் கிடைத்தால் தடுப்பூசி போடுவது குறித்து முடிவு எடுப்பார்கள்.

இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் 7 சதவிகிதம் பேர்தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இந்த 7 சதவிகிதம் பேர் என்பது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கும் 26 கோடி பேரில் 7 கோடி பேர் ஆகும். பாதுகாப்பு, தடுப்பூசிகளுக்கான அவசர பரிசோதனை, அவசர ஒப்புதல், பக்கவிளைவுகள் போன்ற காரணங்களை முன்னிறுத்தி தயக்கம் காட்டுகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் ரத்த உறைவு ஏற்படக் கூடும் என்ற பயம் மற்றும் தடுப்பூசி குறித்தான சில கட்டுக்கதைகள், தவறான தகவல் போன்றவை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கு காரணமாகச் சொல்லப்படுகின்றன. இன்னும் சிலர் கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு செல்வதால், தடுப்பூசி போட தேவையில்லை என்றும் கருதுகின்றனர்.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள்தொகையில் 94 கோடியாக இருக்கும் நிலையில், இதில் 68 சதவிகிதத்தினர் மட்டுமே தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வியாழன் 7 அக் 2021