புலியை பிடிக்க அறிவியல் ரீதியில் நடவடிக்கை: முதன்மை வன அதிகாரி!

public

டி23 புலியை பிடிக்க அறிவியல் ரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தமிழ்நாடு முதன்மை வனத் துறை அதிகாரி சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், மசினக்குடி பகுதியில் மனிதர்களையும், கால்நடைகளையும் தாக்கி கொன்ற டி23 புலியை பிடிக்கும் பணியில் பனிரெண்டாவது நாளாக வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வனத் துறையிடம் ஆட்டம் காட்டி வரும் புலியை பிடிப்பதற்காக ட்ரோன் கேமராக்கள், மோப்ப நாய், கும்கி யானை, உள்ளிட்ட பல வழிமுறைகளை பின்பற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும் புலியை பிடித்தப்பாடு இல்லை. புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், தற்போதுவரை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில்தான் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் புலியை சுட்டுக் கொல்ல பிறப்பித்த வனத் துறையின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

தற்போது, புலி பதுங்கியுள்ள மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில், வனத் துறையினர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களில் ஏறி அமர்ந்து புலியின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் டி23 புலியை பிடிக்க மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” “புலி மனிதர்களை சில இடங்களில் கொன்றது குறித்து அறிவியல் பூர்வமான ஆய்வு நடைபெற்று வருகின்றது. புலியை பிடிப்பதற்கான உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டாலும், இதுவரை புலியை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புலியை பிடிப்பதற்காக ஒவ்வொரு நாளும் வியூகங்களை மாற்றி செயல்படுத்தி வருகிறோம். குறிப்பாக, அறிவியல் ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கவனமாக செய்ய வேண்டும். இல்லையென்றால் நமக்கே ஆபத்து வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. புலியையும் பாதுகாப்புடன் பிடிக்க வேண்டும், அதேசமயம் நம்முடைய குழுவினர் மற்றும் கிராம மக்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வனப்பகுதியில் பரண் அமைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். டி23 புலிக்கு வயது ஆகிவிட்டதால் காட்டில் உள்ள விலங்குகளை அதனால் வேட்டையாட முடியவில்லை. இருப்பினும், எதுவுமே தற்போது உறுதிபடுத்த முடியாது.

புலியை தனிமைப்படுத்தியும், அறிவியல் பூர்வமாகவும், பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது. இக்குழுவில் 6 மருத்துவர்கள் உள்ளனர். ஆட்கொல்லி என இந்த T23 புலியை சொல்ல முடியாது.

புலியை பிடித்து கூண்டில் அடைத்தால் மன ரீதியாக பாதிக்கப்படும் என்பது உண்மை. ஆனால் அதை சரி செய்ய முடியும். வருங்காலங்களில் பிரச்சினைக்குரிய புலிகளை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்த பின்னர் அடுத்த என்ன செய்யலாம் என்பதை மருத்துவக்குழுவினர் முடிவு செய்வார்கள். காடுகளில் வாழும் புலி 14 வருடங்கள் வரை இருக்கும். ஆனால் வன உயிரின பூங்காக்களில் அடைத்து பாதுகாக்கப்படும் புலிகள் 10 ஆண்டுகள் மட்டுமே இருக்கும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *