மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 அக் 2021

ஜவ்வரிசியில் கலப்படமா?: அறிக்கை அளிக்க உத்தரவு!

ஜவ்வரிசியில் கலப்படமா?: அறிக்கை அளிக்க உத்தரவு!

ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்க உணவு பாதுகாப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்தார். அதில், ”ஜவ்வரிசி உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கு சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால், ஜவ்வரிசி உற்பத்திக்காக பலவிதமான வேதிப்பொருட்களை கலந்து கலப்பட ஜவ்வரிசியை பலர் விற்பனை செய்வதால், மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் செய்வதும், இயற்கையாக ஜவ்வரிசி உற்பத்தி செய்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜவ்வரிசி உற்பத்திக்கு வேதிப்பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க கோரி உணவு பாதுகாப்பு துறைக்கு மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், கடந்த 2015ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஜவ்வரிசி உற்பத்தி செய்வது தொடர்பாகவும், கலப்படத்தை தடுக்கவும் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்நிலையில் உணவுத்துறையினர், ஈரப்பதத்துடன் இருக்கும் மரவள்ளி கிழங்கு மூலம்தான் வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டு கலப்பட ஜவ்வரிசி செய்வதாகக் கூறி அதனை விற்பனை செய்வதற்கு தடை விதித்ததோடு, அதை வைத்திருக்கும் ஆலைகளையும் சீல் வைத்தாக மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று(அக்டோபர் 6) நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜவ்வரிசி மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி ஒன்பது வகையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து கடைகளில் விற்பனை செய்யப்பட்ட மூன்று வகையான ஜவ்வரிசி பாக்கெட்டுகளை நீதிமன்றத்திற்கு கொண்டுவர செய்த நீதிபதி, அதை உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

இந்த மாதிரிகளை கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்து கலப்படம் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய உணவு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க தனி குழு அமைக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 6 அக் 2021