மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 அக் 2021

தாத்தா வைத்த மதுவைக் குடித்த பேரன்: இரட்டை மரணம்! - அன்புமணி கோரிக்கை!

தாத்தா வைத்த மதுவைக் குடித்த பேரன்: இரட்டை மரணம்! - அன்புமணி கோரிக்கை!

‘மதுவால் ஏற்பட்ட வேலூர் இரட்டை மரணத்துக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை மூட வேண்டும்’ என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

வேலூர் மாவட்டம் திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் 62 வயது சின்னசாமி கூலி வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சின்னசாமி டாஸ்மாக்கில் இருந்து மதுவாங்கி வந்து தனது வீட்டில் வைத்து அருந்தியுள்ளார். மது அருந்துவதற்காக முறுக்கு உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். இதைக்கண்ட அவர் பேரன் 5 வயது ரித்திஷ் சின்னசாமி வைத்த தின்பண்டங்களை சாப்பிட வந்துள்ளான்.

அவன் தின்பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருக்க சின்னசாமி தான் குடித்தது போக மீதி மதுவை அங்கேயே வைத்துவிட்டு டிவி பார்க்க சென்றுள்ளார். வீட்டில் இருந்த சிறுவன் ரித்திஷின் தாயார் விஜயா உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றதால் அதைப் பார்க்க வீட்டு வாசலுக்குச் சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த ரித்திஷ் குளிர்பானம் என நினைத்து சின்னசாமி வைத்திருந்த மீதி மதுவை எடுத்து அருந்தியுள்ளான். மது குடித்ததால் சிறுவனுக்கு இருமல் ஏற்பட்டுள்ளது. பேரனின் இருமல் சத்தம் கேட்டு அங்கு வந்த தாத்தா, சிறுவன் மது அருந்தியதை கண்டு பதறிப்போனார். உடனடியாக சிறுவனின் பெற்றோரை அழைத்து தகவலை கூறியுள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த விஜயா, சின்னச்சாமியை கடுமையாக திட்டியுள்ளார். அந்த அதிர்ச்சியில் சின்னசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து சின்னசாமியையும், சிறுவன் ரித்திஷையும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சின்னசாமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். சிறுவனை மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். மது குடித்து தாத்தா, பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ‘இனியும் தாமதிக்காமல் மதுக்கடைகளை மூட வேண்டும்’ என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேலூரில், தாத்தா குடித்து விட்டு வைத்த மதுவை பழச்சாறு என நினைத்து குடித்த சிறுவன் உயிரிழந்ததும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் தாத்தாவும் உயிரிழந்துவிட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இதைவிட பெரிய கொடுமையும், சோகமும், இழப்பும் இருக்க முடியாது. தாத்தா, பேரனை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குடி குடியைக் கெடுக்கும். மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு போன்ற எச்சரிக்கை வாசகங்கள் அனைத்துக்கும் சிறந்த எடுத்துக்காட்டு இதுதான்.

தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதுதான் தாத்தாவும், பேரனும் உயிரிழப்பதற்குக் காரணம். இலக்கு நிர்ணயித்து, மது விற்பனை செய்துவரும் தமிழக அரசுதான், இந்த இரட்டை உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். மதுவின் தீமைகள் குறித்து அறியாமல், மாணவர்கள் பள்ளி வகுப்புகளில் அமர்ந்து மது அருந்தும் கொடுமைகள் தமிழ்நாட்டில் நடக்கின்றன. போதை தலைக்கேறிய நிலையில் குழந்தைகளுக்கும் மதுவைக் கொடுத்துக் கெடுக்கும் இழி செயலில் சில குடிகாரர்கள் ஈடுபடும் காட்சிகள் காணொலிகளாக சமூக வலைதளங்களில் வெளியாகின. இப்போது, வீட்டில் பெரியவர்கள் குடித்து விட்டு வைத்த மதுவை சிறுவன் குடித்து உயிரிழந்த கொடுமை அரங்கேறியிருக்கிறது. இந்த ஆபத்தான போக்கு தடுக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மட்டும் மது குடிப்பதால் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஏராளமான பெண்கள் இளம் வயதில் கைம்பெண்களாகின்றனர். 200 வகையான நோய்கள் ஏற்படுகின்றன. குடும்ப வன்முறையும், வறுமையும் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 10 முதல் 20 விழுக்காடு வரை குறைகிறது. இதற்கு பிறகும் மதுவால் கிடைக்கும் வருமானத்திற்காக மது வணிகத்தை அரசு தொடர்வது பெருங்கேடானது. மக்கள் நலம் பேணும் அரசுக்கு இது அழகல்ல. தமிழ்நாட்டில் இனி இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதை உறுதி செய்யவும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மதுக்கடைகளை ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

செவ்வாய் 5 அக் 2021