மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 அக் 2021

மனு அளித்த சிறிது நேரத்திலேயே நிறைவேற்றிய ஆட்சியர்!

மனு அளித்த சிறிது நேரத்திலேயே நிறைவேற்றிய ஆட்சியர்!

மனு அளித்த சிறிது நேரத்திலேயே மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கியதோடு, அவரை வாசல் வரை தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்த சேலம் மாவட்ட ஆட்சியரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளை புகார் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் வகையில் வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெறும் மாவட்ட ஆட்சியர், நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட துறைக்கு பரிந்துரை செய்வார். ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. அதற்கு மாற்றாக, புகார் பெட்டி வாயிலாக மனுக்கள் பெறப்பட்டன.

இந்தநிலையில் நோய்த்தொற்று பரவல் கணிசமாக குறைந்து வருவதால் மீண்டும் நேரடி குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த கடந்த 28ஆம் தேதி அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

அதன்படி, இன்று(அக்டோபர் 4) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெற்றன.

அதுபோன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கீழ்தளத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் கார்மேகம் , விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அப்போது, சேலம் மாவட்டம் டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற கூலித் தொழிலாளியின் மகன் வரதராஜன் என்ற மாற்றுத்திறனாளி தனக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாற்றுத்திறனாளி வரதராஜனுக்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

சிறிது நேரத்திலேயே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மூலமாக அவருக்கு சக்கர நாற்காலி வரவழைக்கப்பட்டது. பின்னர், அந்த மாற்றுத்திறனாளியை மாவட்ட ஆட்சியரே தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து, ஆட்சியர் அலுவலக நுழைவாயில் வரை அவரே சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு வந்து, வாகனத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்தார். சக்கர நாற்கலியை பெற்றுக் கொண்ட வரதராஜன், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

மனுவை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 4 அக் 2021