மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது!

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மது!

விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறைந்துவந்தாலும், மூன்றாவது அலையைத் தடுக்க கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதும், தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டுக்கொள்வதுதான் சிறந்த வழி என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி குறித்து மக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனால், தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சமீபத்தில் அறிவித்திருந்தார். இது நல்ல பயனை அளித்தது.

தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியும் அதே யுக்தியை கையில் எடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க விரும்புவோர், தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பித்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். தடுப்பூசி செலுத்திய வாடிக்கையாளர்கள்தான் மதுபானம் வாங்கி செல்கின்றனர் என்பதை அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.

அவ்வாறு தடுப்பூசி செலுத்தாத நபருக்கு மதுபானம் விற்கப்பட்டிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மாவட்டங்களின் செயல்பாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியலை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டிருந்தார். அதில் , விருதுநகர் மாவட்டம் ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகியிருந்தது. அதனால், தடுப்பூசி செலுத்துவதில் எக்சலன்ட் என்ற இடத்தை பிடிப்பதற்கான முயற்சியில் தற்போது விருதுநகர் மாவட்டம் இறங்கியுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 3 அக் 2021