மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

எதற்காக ஒன்றிய அரசிடம் ரூ.40,000 கோடி கடன் கேட்கிறது பிஎஸ்என்எல்?

எதற்காக ஒன்றிய அரசிடம் ரூ.40,000 கோடி கடன் கேட்கிறது பிஎஸ்என்எல்?

பொதுத்துறை சார்ந்த தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் ஒன்றிய அரசிடமிருந்து 40,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளது.

நமது நாட்டில் தொலைத்தொடர்புத் துறையில் தனியார் வருகைக்கு முன்பு பிஎஸ்என்எல் மட்டுமே தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வந்தது. தொலைபேசி இணைப்பு பெறுவது என்பது 1990–களில் மிகவும் சிரமமான விஷயம் ஆகும்.

அமைச்சர், எம்.பி.யின் சிபாரிசு, அன்பளிப்பு என்று கொடுத்தாலும் புதிய இணைப்புக்கு பதிவு செய்த பின்பு சில ஆண்டுகள் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். அப்போது நாட்டில் தொலைத்தொடர்பு நிலையங்களை பிஎஸ்என்எல் மட்டுமே கொண்டிருந்தது.

தொலைத்தொடர்புத் துறையில் தனியார் வருகைக்குப் பிறகு பிஎஸ்என்எல் கடும் நிதி நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது. தனியார் துறையிலும் ஏர்செல், டாட்டா டொகோமோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தமது சேவைகளை கைவிட்டன.

தற்போது வோடஃபோன் நிறுவனமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே தற்போது தொலைத்தொடர்புத் துறையில் லாபத்தில் இயங்குகின்றன. இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 11.5 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அதாவது, நமது நாட்டின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் பிஎஸ்என்எல் 10 சதவிகித பங்களிப்பை தற்போது கொண்டுள்ளது.

பல ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் ஆன்லைன் இணைப்பு பெற்றவர்கள் அதன் சந்தாதாரர்களாகத் தற்போதும் தொடர்கின்றனர். என்றாலும் தனியார் போட்டியை சமாளிக்க முடியாமல் பிஎஸ்என்எல் தொடர்ந்து தடுமாறி வருகிறது.

இந்த நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்குத் தற்போது 30,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு 2019ஆம் ஆண்டு 69,000 கோடி ரூபாய் நிவாரணமாக அளித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நமது நாட்டில் பல இடங்களில் சொத்துகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை விற்று கடந்த நிதி ஆண்டில் 20,000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு அந்த நிறுவனம் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த இலக்கை நிறுவனத்தால் எட்ட முடியவில்லை. அதன் காரணமாக நிறுவனத்தை நடத்துவதற்கு 20,000 கோடி ரூபாயும், கடன் தவணைகளை செலுத்துவதற்கு 20,000 கோடி ரூபாய் சேர்த்து 40,000 கோடி ரூபாயை ஒன்றிய அரசிடம் கோரியுள்ளது.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 70,000 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் ஒன்றிய அரசு தக்க உதவியை பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வழங்கி நிறுவனத்தை நடத்துவதற்கு உதவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

ஒன்றிய அரசு நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு வாடகைக்கு விட்டோ அல்லது தனியார் மயமாக்குவதன் மூலமோ நிதி திரட்டுவதற்கு முயன்று வருகிறது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தை நடத்துவதற்கு மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்ற எண்ணமும் பலரிடம் உள்ளது.

பிஎஸ்என்எல் இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதே அதன் பழைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. வரும் காலங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்தே அந்த நிறுவனத்தின் வளர்ச்சி இருக்கும் என்பதே நிஜம்.

-ராஜ்

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் - மோடியை வாழ்த்திய ...

5 நிமிட வாசிப்பு

உலக பட்டினிக் குறியீடு: இந்தியாவுக்கான இடம் -  மோடியை வாழ்த்திய  கபில் சிபல்

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்துசமய அறநிலையத் துறையில் பணி!

அனிதா முதல் அனு வரை... : தொடரும் நீட் தற்கொலைகள்!

5 நிமிட வாசிப்பு

அனிதா முதல் அனு வரை... :  தொடரும் நீட் தற்கொலைகள்!

ஞாயிறு 3 அக் 2021