மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள்... காரணம் என்ன?

அதிகரித்து வரும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள்... காரணம் என்ன?

கடந்த ஆண்டில் 1,28,531 குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிராக பதிவாகி இருப்பதும் ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்து வருகிறது என்றும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கான காரணம் என்ன?

‘குழந்தைகளுக்கான உரிமை மற்றும் நீங்கள்’ என்ற அமைப்பு, இந்தியாவில் கடந்த ஆண்டில் சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் ஆய்வு செய்துள்ளது. இதில், கடந்த ஆண்டு 1,28,531 குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிராக பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்து உள்ளன.

கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் இந்த குற்றங்கள் அதிக அளவில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை திருமணம் 50 சதவிகிதம் அளவுக்கும், ஆன்லைன் அத்துமீறல் வழக்குகள் 400 சதவிகிதம் அளவுக்கும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

மாறி வரும் பழக்கவழக்கம், ஒருவருடன் பழகும் அணுகுமுறையில் ஏற்படும் மாற்றம், செல்போன் பயன்பாடு அதிகரிப்பு, சமூக வலைதளங்களில் மூழ்கி முன்பின் தெரியாதவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல், திரைப்படங்களில் வரும் இளம்பருவக் காதல் காட்சிகள் போன்றவை இளம் பெண்கள், சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிக்க முக்கிய காரணங்களாக சமூகச் செயற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

இவை தவிர சிறார் கடத்தல், தற்கொலைக்குத் தூண்டுதல், காயம் ஏற்படுத்துதல், கொலை முயற்சி, சிசுக்கொலை என வழக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திலும் நீளுகின்றன.

மாநிலங்கள் நிலவரத்தைப் பொறுத்தவரை மத்தியப்பிரதேசம் (13.2 சதவிகிதம்), உத்தரப்பிரதேசம் (11.8 சதவிகிதம்), மகாராஷ்டிரா (11.1 சதவிகிதம்), மேற்கு வங்காளம் (7.9 சதவிகிதம்), பிகார் (5.1 சதவிகிதம்) ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டுமே மொத்த வழக்குகளில் சுமார் 50 சதவிகிதத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மேற்கு மண்டலக் காவல்துறை எல்லைக்குட்பட்ட மாவட்டங்களில், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 2020ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வகை செய்யும் போக்சோ சட்டம் அமல்படுத்தப்பட்டு வந்தாலும், நடைமுறையில் அந்த நடவடிக்கை புகார்தாரர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய தீர்வைத் தருகிறதா என்ற கேள்வி பரவலாக எழுகிறது.

ஒவ்வொரு முறை சிறார் பாலியல் புகார்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளிச்சத்துக்கு வந்து தலைப்புச் செய்திகளானாலும், பின்வரும் நாட்களில் அந்த வழக்கு பதிவுக்குப் பிந்தைய நடவடிக்கைகள், பொதுவெளியில் தொடர் கவனிப்பைப் பெறத் தவறிவிடுகின்றன.

அதற்கு காரணம், அந்த பாலியல் சட்டம் அல்லது புகார்கள் மீதான நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இருப்பதில்லை.

"பெரும்பாலும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் அந்த சிறாரின் குடும்ப உறுப்பினராகவோ அவரது உறவினராகவோ அல்லது குடும்பத்துக்கு நெருக்கமானவராகவோ இருக்கலாம். சிறு வயதில் நிகழ்ந்த கொடுமை, அந்த சிறுவரின் வாழ்வில் பின்னாளிலும் கூட மனவுளைச்சலை ஏற்படுத்தக்கூடும்" என்று ஆய்வுகள் கூறுவதாக இந்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தகைய பாதிப்பில் இருந்து வெளிவரவே இந்த புகார் வசதியை அரசு உருவாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 3 அக் 2021