மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 அக் 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: உடனடி சக்தி தரும் உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்களா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: உடனடி சக்தி தரும் உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்களா?

தினமும் காலையில் சுறுசுறுப்பாக வேலையைத் தொடங்கும் பலர் சிறிது நேரத்திலேயே உடலிலுள்ள ஆற்றல் எல்லாம் தீர்ந்ததுபோல் சோர்ந்துவிடுவார்கள். ஆற்றலை இழப்பது என்பது நம்முடைய அன்றாட வேலைகளை பாதித்து, உற்பத்தித் திறனையும் குறைக்கும். நாம் சாப்பிடும் உணவுகளும் அதன் அளவும்தான் நாள் முழுவதும் நாம் ஆற்றலுடன் இயங்குவதற்குக் காரணமாக அமையும். சாப்பிடும் அனைத்து உணவுகளும் ஆற்றலை அளித்தாலும், சில உணவுகளில் ஊட்டச்சத்துகள் அதிகமாகக் காணப்படும். அது உடலின் ஆற்றலை அதிகரித்து நாள் முழுவதும் விழிப்போடும் கவனத்தோடும் செயல்பட உதவும்.

இதோ உங்களுக்கான ஆற்றலை அதிகரிக்கும் உணவுகளின் பட்டியல்...

தண்ணீர்

உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று தண்ணீர். உடலின் எடையில் 60% தண்ணீர்தான் இருக்கிறது. மேலும் உடலில் பல்வேறு செல்களின் செயல்பாட்டுக்கான ஆற்றல் உற்பத்தியிலும் தண்ணீரின் பங்கு அளப்பரியது. போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதோடு, உடலின் இயக்கத்தின் வேகம் குறைந்து மந்தமாகவும் சோர்வாகவும் மாற்றும். நாள்தோறும் போதிய இடைவெளியில் தண்ணீர் குடிப்பது சோர்வை நீக்கி புத்துணர்ச்சியைத் தரும்.

காபி

உடலும் மனதும் சோர்வாகிவிட்டால் நம்முடைய முதல் தேடல் காபியாகத்தான் இருக்கும். காபியில் காணப்படும் கஃபைன் வேகமாக ரத்தத்தில் கலந்து, மூளையின் செயல்பாட்டைத் தூண்டி நம்மை சுறுசுறுப்பாக்கும். மேலும் எபினெஃப்ரைன் (Epinephrine) என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து உடலையும் மூளையையும் தூண்டி சுறுசுறுப்பாக்கும். இவ்வாறு மூளையும் உடலும் தூண்டப்படுவதால் நீண்ட நேரம் விழிப்போடும் கவனத்தோடும் செயலாற்ற முடியும்.

வாழைப்பழம்

ஆற்றலை உடனடியாக அதிகரிக்கச் சிறந்தது வாழைப்பழம். அதில் உள்ள கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் பி6 இவை அனைத்தும் உடலில் ஆற்றலின் அளவை அதிகரிக்கும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 75 கிலோமீட்டர் தூரம் சைக்கிளிங் செய்வதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது, கார்போஹைட்ரேட் சேர்க்கப்பட்ட குளிர்பானத்துக்கு இணையான ஆற்றலை அளித்து, தடகள வீரர்களின் செயல்திறனையும் அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முட்டை

முட்டையில் காணப்படும் புரதச்சத்து, உடலுக்கு நிலையான, நீடித்த ஆற்றலைக்கொடுக்கும் தன்மை வாய்ந்தது. முட்டையில் காணப்படும் லியூசின் (Leucine) என்ற அமினோ ஆசிட் பல்வேறு வகையில் உடலில் ஆற்றலைத் தூண்டும். முட்டையில் காணப்படும் வைட்டமின் பி சத்து, உடலிலுள்ள நொதிகளைச் சீராகச் செயல்படவைத்து, உணவு ஜீரணமாவதை சீராக்கி, உடலுக்கு சக்தியை அனுப்ப உதவும்.

ஆப்பிள்

உலகம் முழுக்க பிரபலமான பழம் என்றால் அது ஆப்பிள்தான். ஆப்பிளில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுகின்றன. ஒரு மீடியம் சைஸ் ஆப்பிளில் 25 கிராம் கார்போஹைட்ரேட், 19 கிராம் சர்க்கரை, 4 கிராம் நார்ச்சத்து காணப்படுகிறது. ஆப்பிளில் காணப்படும் இயற்கையான இனிப்பு மற்றும் நார்ச்சத்து, உடலுக்குத் தேவையான ஆற்றலை சீராக விநியோகிக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால், ஆப்பிளை பழமாக அப்படியே சாப்பிட வேண்டும். ஜூஸாக்கிக் குடித்தால் அதிலிருக்கும் நார்ச்சத்து நீங்கி, நீடித்த, நிலையான ஆற்றல் கிடைக்காது.

ஆரஞ்சு

ஆரஞ்சில் அதிகமான வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. உடலில் ஜீரணத்தின்போது செல்களிடையே வெளிப்படும் உடலுக்கு ஒவ்வாத ஆக்சிஜன் கூறுகளை ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress) என்பார்கள். இவை உடலில் சோர்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்டுகள், இவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. ஆரஞ்சு பழங்கள் சோர்வை நீக்க உதவும் அற்புதப் பழம் என்றே கூறலாம்.

விதைகள்

சியா, ஆளி, பூசணி ஆகிய விதைகளும் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. இந்த விதைகளில் தாவரத்திலிருந்து உருவாகும் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் காணப்படும். அவை உடலில் காணப்படும் அழற்சியையும் சோர்வையும் நீக்கும் தன்மை கொண்டது. இந்தக் கொழுப்பு அமிலம் உடலின் செல்கள் சீராக இயங்கவும் உதவும். இதுபோன்ற விதைகளில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து ஜீரண வேகத்தைக் குறைத்து நீடித்த நிலையான ஆற்றலை உடலுக்கு அளிக்கும். பாதாம், வால்நட், முந்திரி ஆகிய நட்ஸ் வகைகளும் ஆற்றலை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

பழுப்பு அரிசி

பழுப்பு அரிசியில் அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. வெள்ளை அரிசியைக் காட்டிலும் குறைவாக பிராசஸ் செய்யப்படுவதால் அதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுகள் நிறைந்திருக்கும். பழுப்பு அரிசியிலிருக்கும் நார்ச்சத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்வகிக்கும் திறன் பெற்றது என்பதால் உடலிலுள்ள சர்க்கரையின் அளவு சீராகும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் செயல்பட முடியும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

கூடுதல் ஆற்றல் தேவைப்படுவோருக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு சிறந்த உணவு. ஒரு மீடியம் சைஸ் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் 23 கிராம் கார்போஹைட்ரேட், 3.8 கிராம் நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் ஏ சத்து ஆகியவை அடங்கியிருக்கின்றன. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் கார்போஹைட்ரேட் ஜீரணத்தை தாமதமாக்கும். அதனால் உடலில் சீரான அளவு ஆற்றல் இருந்து கொண்டேயிருக்கும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைப்பூ பருப்பு தோசை

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

ஞாயிறு 3 அக் 2021