மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

பெண் விமானப்படை அலுவலருக்கு இருவிரல் பரிசோதனை!

பெண் விமானப்படை அலுவலருக்கு இருவிரல் பரிசோதனை!

விமானப்படை பெண் அலுவலருக்கு இருவிரல் மருத்துவப் பரிசோதனை செய்ததற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்து விமானப் படைத் தலைமை தளபதிக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.

கோவை பந்தய சாலை பகுதியில் விமானப்படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதம் 15ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 அலுவலர்கள் பயிற்சிக்காக இங்கே வந்துள்ளனர். பயிற்சிக்கு வந்த பெண் விமானப்படை அலுவலர் ஒருவர், தான் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதியன்று ஓய்வெடுத்திருந்த நிலையில், அங்கு பயிற்சிக்காக வந்த விமானப்படை லெப்டினன்ட் அமிதேஷ் ஹர்முக் என்னும் சக அலுவலர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின்படி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பாதிக்கப்பட்ட பெண் கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கடந்த 25ஆம் தேதி அமிதேஷை கைது செய்து நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, விமானப்படை அலுவலர் என்பதால் இந்த வழக்கை மாநகர காவல் துறையினர் விசாரிக்க இயலாது என அமிதேஷ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தார்.

அதேசமயம் காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதியிடம் அவகாசம் கேட்ட நிலையில், ஒருநாள் மட்டும் காவலில் எடுக்க நீதிபதி திலகேஷ்வரி உத்தரவிட்டார். இதை அடுத்து, 25ஆம் தேதி அன்றே அமிதேஷை உடுமலைப்பேட்டை கிளைச்சிறையில் அடைத்தனர். அவர்மீது 376 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை அடுத்து, செப்டம்பர் 27ஆம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர், விமானப்படை பயிற்சி கல்லூரி அலுவலர்கள், கைதான அமிதேஷ் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, இச்சம்பவம் விமானப்படை வளாகத்தில் நடந்திருப்பதால், விமானப்படையினரே விசாரித்து கொள்கிறோம் என விமானப்படை அலுவலர்கள் கூறினர்.

ஆனால், இந்த வழக்கை விமானப்படை விசாரித்தால் தனக்கு நீதி கிடைக்காமல் போய்விடும். அதனால் காவல் துறையினரே விசாரிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்தார். இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, இந்த வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தார்.

இதற்கிடையில் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது. அதில், “பாலியல் வன்கொடுமை குறித்து விமானப்படை பயிற்சி கல்லூரியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. புகாரைத் திரும்ப பெற உயர் அலுவலர்கள் வற்புறுத்தினர். மேலும் விமான படை நடத்திய மருத்துவ சோதனையின்போது தனக்கு உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது” என்று பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் நேகா சர்மா, விமானப்படை தலைமைத் தளபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனையை விமானப்படை மருத்துவர்கள் மேற்கொண்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் மிகவும் அதிருப்தியுடன்கூடிய கண்டனத்தைப் பதிவு செய்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியது மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை, கண்ணியத்திற்கான உரிமையை மீறும் செயலாகும். இருவிரல் பரிசோதனை 2014ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவியல்பூர்வமற்றது என்று கூறியுள்ளதை விமானப்படை மருத்துவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைதான அமிதேஷ் நேற்று (செப்டம்பர் 30) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திலகேஸ்வரி விமானப்படை அலுவலர் மீதான பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லெப்டினன்ட் அமிதேஷை விமானப்படை காவலில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இந்திய விமானப்படைச் சட்டம் 1950இன்படி மாநில காவல் துறை விமானப்படை அலுவலரை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என்பதால் அமிதேஷை இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்க நீதிபதி திலகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 1 அக் 2021