மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

திருப்பூர்: குவியும் ஆர்டர்கள் - விடுமுறை அளிப்பதில் சிக்கல் - ஊதிய உயர்வு - வேலைவாய்ப்பு முகாம்!

திருப்பூர்:  குவியும் ஆர்டர்கள் - விடுமுறை அளிப்பதில் சிக்கல் - ஊதிய உயர்வு - வேலைவாய்ப்பு முகாம்!

பின்னலாடை நகரமான திருப்பூர் மாவட்டத்தில் வருடத்துக்கு ரூ.50,000 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக அளவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தால் வர்த்தகம் பாதியாக சரிந்தது.

தற்போது இரண்டாவது அலையைக் கடந்து வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் பின்னலாடை துறை ஏறுமுகமாகப் பயணிக்க தொடங்கியுள்ளது. பலரும் தடுப்பூசி செலுத்தி உள்ளதால் மூன்றாவது ஆலை அச்சம் நீங்கி பின்னலாடை தொழில் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து பல ஆர்டர்கள் வர இருக்கின்றன. நூல்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. திருப்பூர் பின்னலாடை துறையைப் பொறுத்தவரை பண்டிகை காலங்களில் மற்ற மாநிலத் தொழிலாளர்கள் நீண்ட நாட்கள் விடுமுறைக்குச் செல்வது வழக்கம்.

குறிப்பாக தீபாவளி, பொங்கல் என்றால் 15 நாட்கள் முதல் ஒரு மாதக் காலம் வரை விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்குச் சென்று விடுவார்கள். ஆனால், இந்த முறை பண்டிகைக்குத் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கண்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் புதிய ஆடைகளை விரைவில் தயார் செய்து அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டு விடுமுறையைத் தவிர்த்து வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளருக்கு சம்பள உயர்வு நிர்ணயிப்பதற்காக ஆடை உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

எட்டாவது சுற்று பேச்சில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு படிப்படியாக 32 சதவிகித சம்பள உயர்வு வழங்க இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ‘சைமா’ சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கம், தொழிற்சங்கத்தினர் இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தச் சம்பள உயர்வு இன்று (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகிறது.

விடுமுறை அளிப்பதில் சிக்கல், சம்பள உயர்வு என்கிற நிலையில், திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (அக்டோபர் 1) நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் தனியார் துறையில் வேலை அளிப்பவர்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்யவுள்ளனர். ஆகவே, வேலை தேடும் நபர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை, சுய தகவல் படிவத்துடன் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் பங்கேற்பதன் மூலமாகப் பதிவில் குறை இருந்தால் சரிசெய்து கொள்ளவும், கூடுதல் கல்வி தகுதியைப் பதிவு செய்து கொள்ளவும், தகுதி இருப்பின் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம்.

அதேவேளையில் தனியார் துறையில் பணியில் சேர்வதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த முகாமானது வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தொடர்ந்து நடைபெறும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 1 அக் 2021