மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

நான்கு பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு!

நான்கு பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 4 பேரை தாக்கி கொன்ற புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் யானை மற்றும் புலிகள் உள்ளிட்ட விலங்குகள் நுழைந்து அச்சுறுத்துவது தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி கொன்று வருகிறது.

தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள தேவன் எஸ்டேட்டில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாடு மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்பவரை புலி தாக்கியது. இதில் கடுமையான காயத்துடன் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயற்சித்து வருகின்றனர். புலியை பிடிக்கும் பணியில் சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் அதி விரைவுப்படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏழு நாட்களாக வனத்துறையினர் போராடியும், புலியை பிடிக்க முடியவில்லை. இதனால் தேவன் எஸ்டேட் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதனிடையே தேவன் எஸ்டேட் பகுதியில் இருந்த டி23 புலி சிங்காரா பகுதிக்குள் சென்றது. இன்று சிங்காரா வனப் பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்பவரை புலி கடித்து கொன்றுவிட்டு, வனத் துறையிடம் இருந்து தப்பி சென்றது. ஒரு வாரத்திலேயே இரண்டு பேரை புலி கொன்றதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

டி 23 புலி இதுவரை 4 பேரையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளது.

இந்நிலையில், ஒருவாரத்திற்கு மேலாக வனத் துறையினருக்கு ஆட்டம் காட்டி வரும் டி 23 புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதலில் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்க திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 1 அக் 2021