மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

பண்டிகைகளுக்காகக் காத்திருக்கும் கொரோனா!

பண்டிகைகளுக்காகக் காத்திருக்கும் கொரோனா!

நாட்டில் பண்டிகை காலம் வரவுள்ளதால் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் வாரந்தோறும் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து விளக்கமளிப்பது வழக்கம். அதுபோன்று டெல்லியில் நேற்று (செப்டம்பர் 30) செய்தியாளர்களைச் சந்தித்த ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும். பண்டிகை காலத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போடுவது அவசியமாக உள்ளது.

கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், நாட்டின் மொத்த பாதிப்பில் பெருவாரியான எண்ணிக்கை கேரளாவில்தான் பதிவாகிறது.

இந்தியாவில் 18 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு 5% முதல் 10% வரை பதிவாகி வருகிறது. கேரளாவில் 1,44,000 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இது நாட்டில் மொத்தமாக கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 52% ஆகும். மகாராஷ்டிராவில் 40,000 பேரும், தமிழ்நாட்டில் 17,000 பேரும், மிசோரத்தில் 16,800 பேரும், கர்நாடகாவில் 12,000 பேரும் சிகிச்சையில் உள்ளனர்” என்று கூறினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா, “கொரோனா காலத்தில், தேவையில்லாத பயணத்தைத் தவிர்ப்பது மற்றும் இந்தாண்டு மட்டுமாவது பண்டிகைகளை ஆடம்பரமின்றி கொண்டாடுவது புத்திசாலிதனம். கொரோனாவுக்கு வேறுபாடு தெரியாது; கூட்டமாக இருந்தால் ஒட்டிக்கொள்ளும்.

சுற்றுலா தலங்களில் அதிகளவில் கூடுவது, சுற்றுலா சென்றவர்களுக்கு மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உருவாகும். அதனால், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்துவதே தற்போதைய நோக்கம். பூஸ்டர் தடுப்பூசிகள் குறித்த பேச்சு தற்போது அவசியமில்லை” என்று கூறினார்.

பண்டிகை காலம் குறித்து எச்சரிக்கை விடுப்பது இது முதன்முறை கிடையாது. கிட்டதட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஒன்றிய அரசு இது தொடர்பாக அறிவுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல், பண்டிகை காலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், தேவைப்படும் பட்சத்தில் 144 உத்தரவைப் பயன்படுத்திக் கொள்ளவும் மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 1 அக் 2021