மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

பனியன் நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்: அதிகரிக்கும் நூல் விற்பனை!

பனியன் நிறுவனங்களில் குவியும் ஆர்டர்கள்: அதிகரிக்கும் நூல் விற்பனை!

திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொரோனா தொற்றுக்குப் பின் தற்போது இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நூற்பாலைகளிடம் இருந்து நேரடியாகவும், வர்த்தகர்களிடம் இருந்தும் பின்னலாடை நிறுவனத்தினர் ஆடை உற்பத்திக்கு, குறிப்பாக பனியன், டி-ஷர்ட் போன்றவற்றுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஒசைரி நூலை அதிக அளவில் கொள்முதல் செய்கின்றனர்.

கொரோனா தொற்றுக்குப் பின் தற்போது ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலிருந்து திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. மேலும் விஜயதசமி, தீபாவளி மற்றும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ், ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து தொடர்ச்சியாக பண்டிகை காலம் வருவதால் திருப்பூரில் உள்ள உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் ஆர்டர்கள் குவிகின்றன. இதனால் ஆடை தயாரிப்புக்காக பின்னலாடை துறையினர் அதிக அளவு நூல்களைக் கொள்முதல் செய்ய தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள நூல் உற்பத்தியாளர்கள், “அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் வெளிமாநில வர்த்தகர்களிடமிருந்து திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சிறப்பான வகையில் ஆர்டர் கிடைத்து வருகிறது. இதனால் உள்நாட்டில் நூல் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. நூல் ஏற்றுமதியும் சீராக நடந்து வருகிறது. நூற்பாலைகளிடம் நூல் இருப்பு இல்லை என்ற நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது. அதேசமயம் ஆடை உற்பத்தியாளர்களுக்குத் தட்டுப்பாடு இன்றி ஒசைரி நூல் வழங்கப்படுகிறது. வரும் நவம்பர் மாதம் சந்தைக்குப் புதிய பருத்தி வரத்து தொடங்கும். எனவே நூல் விலை மாற்றமின்றி இதே நிலையில் தொடரும்” என்றனர்.

கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.27,650 கோடி வர்த்தகத்தை எட்டிய திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, கொரோனாவால் 2019-20ஆம் நிதியாண்டில் ரூ.27,280, 2020-21ஆம் நிதியாண்டில் ரூ.24,750 கோடி ரூபாயாகச் சரிந்தது. முதல் அலை ஓய்ந்ததால் 2021-22ஆம் நிதியாண்டு தொடக்கம் முதல், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி நிலைக்கு திரும்பியது. ஆனால், மே மாதம் உருவான இரண்டாவது அலையால் வர்த்தகம் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்தது.

தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் வெளிநாடுகளில் இருந்து திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10,835 கோடியை எட்டியுள்ளது. இந்த நிதியாண்டின் மொத்த வர்த்தகம் ரூ.28,000 கோடியை எட்டிப்பிடித்து விடும் என பனியன் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 29 செப் 2021