மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

விலை வீழ்ச்சி: அறுவடை செய்யாமல் அழுகும் இஞ்சி!

விலை வீழ்ச்சி: அறுவடை செய்யாமல் அழுகும் இஞ்சி!

இஞ்சியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கூடலூரில் இஞ்சியை அறுவடை செய்வதா அல்லது அப்படியே விட்டுவிடுவதா என்கிற நிலையில் இஞ்சிகளை அழுகல் நோய் தாக்குகிறது என்றும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காபி, குறுமிளகு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் விளைகிறது. ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்கிறது. இதைப் பயன்படுத்தி மே மாதம் விவசாயிகள் தங்களது நிலத்தை தயார் செய்து இஞ்சி, நெல் உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுகின்றனர்.

இதில் கூடலூர், மசினகுடி, தொரப்பள்ளி, பாடந்தொரை, தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் ஏக்கர் கணக்கில் இஞ்சி பயிரிடப்பட்டுள்ளது. அது விவசாயிகளுக்கு நல்ல வருவாயை ஈட்டித் தருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 54 கிலோ கொண்ட ஒரு மூட்டை இஞ்சிக்கு ரூ.10,000 வரை விலை கிடைத்தது.

ஆனால், தற்போது இஞ்சி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஒரு மூட்டை இஞ்சிக்கு ரூ.1,800 மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் இஞ்சிகளை அறுவடை செய்ய தொழிலாளர்களுக்கு கூலி, போக்குவரத்து போன்ற செலவுக்கு கூட கட்டுபடியாகாத நிலை உள்ளது. இதன் காரணமாக தோட்டங்களில் விளைந்த இஞ்சியை அறுவடை செய்யாமல் விவசாயிகள் அப்படியே விட்டு வைத்துள்ளனர். இதனால் இஞ்சி செடிகளுக்கு இடையே களைச்செடிகள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது. இதனிடையே இஞ்சி பயிர்களை அழுகல் நோய் தாக்கி வருகிறது. எனவே அறுவடை செய்வதா அல்லது அப்படியே விட்டு விடுவதா என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள இஞ்சி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இஞ்சி ஒரு மூட்டைக்கு ரூ.10,000 கிடைத்தது. கடந்த ஆண்டு மூட்டைக்கு ரூ.4,000 கிடைத்தது. நடப்பு ஆண்டில் ஒரு மூட்டை இஞ்சி ரூ.1,800 மட்டுமே விலை கிடைக்கிறது. ஆனால், சராசரியாக ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை செலவு செய்து இஞ்சி பயிரிடப்படுகிறது. ஆனால் போதிய விலை கிடைக்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே நஷ்டத்தைத் தவிர்க்க இஞ்சியை அறுவடை செய்யவில்லை. மேலும் வரும் ஆண்டில் நல்ல விலை கிடைத்தால் அறுவடை செய்ய வசதியாக இஞ்சி பயிர்கள் தோட்டங்களில் அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ளது. ஆனாலும் இஞ்சிகளை அழுகல் நோய் தாக்குகிறது” என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

செவ்வாய் 28 செப் 2021