மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

வெளிநாட்டினரை கண்காணிக்க தனிப்பிரிவு அமைக்க உத்தரவு!

வெளிநாட்டினரை கண்காணிக்க தனிப்பிரிவு அமைக்க உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு வரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப்பிரிவை அமைக்க தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொழில், வேலைவாய்ப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா வரும் இலங்கை, நைஜீரியா, சீனா, ஈரான், பங்களாதேஷ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த பலர், விசா காலம் முடிந்தும் இந்தியாவிலேயே தங்கியிருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற வழக்கில் தொடர்புடைய சுரேஷ் ராஜ் உள்ளிட்ட பல வெளி நாட்டினர், ஜாமீன் கோரியும், முன்ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர்களின் விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி இன்று(செப்டம்பர் 27) தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தாக்கல் செய்த அறிக்கையில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மட்டும் 13 ஆயிரத்து 289 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பதிவு செய்த நீதிபதி தண்டபாணி, வெளிநாட்டவர்கள் இந்தியா வரும்போது, அவர்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும் அவருடைய வருகை மற்றும் புறப்பாடு உள்ளிட்டவைகளை கண்காணிக்க குடியுரிமை அதிகாரிகள் இருப்பதாகவும், மேலும் வெளிநாட்டவர்களின் வருகையை பதிவு செய்ய பதிவு அலுவலகங்களும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல வெளிநாட்டினர், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விசா காலம் முடிந்த வெளிநாட்டினரை உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க ஒன்றிய அரசு விதிகளை வகுத்துள்ளது. அவற்றை மாநில அரசுகள் பின்பற்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை, தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகு, உடனடியாக அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதி,

விசா காலம் முடிவடைந்து தங்கியிருக்கும் பலர் போலி ஆவணங்கள் மூலமாக இந்தியஅடையாள அட்டைகளை பெற்றுள்ளனர். வெளிநாட்டவர்களை கண்காணிப்பதற்கு மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா வரும் வெளிநாட்டினரின் பாஸ்போர்ட் விசா உள்ளிட்ட தகவல்களை பதிவு அலுவலகங்கள், மாநில காவல் துறைக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் விசா காலம் முடிவடைந்து சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

முன்னதாக, அனைத்து ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 27 செப் 2021