மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

விடுமுறை நாட்களில், விருந்துகளில் சுவையான, சூப்பரான உணவுகள் கிடைக்கும் நேரத்தில் பலருக்கும் ஏற்படக் கூடிய பிரச்சினை உடல்நலம் சார்ந்ததாகவே இருக்கிறது. நேற்று தானே சாப்பிட்டோம், இன்றைக்கும் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா... நம் உடலுக்கு சரிபட்டு வருமா போன்ற கேள்விகள் அடுக்கடுக்காக எழுகின்றன. அப்படிப்பட்ட சில சந்தேகங்களும் அதற்கான தீர்வுகளும் இதோ...

இறைச்சியை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளலாமா?

இறைச்சி புரதச்சத்து மிகுந்த உணவு. இளைஞர்கள், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் கால் கிலோ அளவுக்கு இறைச்சியைச் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக அனைவரும் வாரத்தில் ஒரு நாளைக்கு சிக்கனும், பத்து நாள்களுக்கு ஒருமுறை மட்டனும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாரத்துக்கு மூன்று முறை சிக்கன், இரண்டு முறை மட்டன் கொடுக்கலாம். வயதானவர்கள், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வேறு ஏதாவது உடல்நல பிரச்சினை உள்ளவர்கள் அவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவரின் ஆலோசனையின்படி இறைச்சியை உணவில் சேர்ப்பதைப் பற்றி முடிவெடுக்கலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்?

குழந்தைகள், வளரும் இளைஞர்கள் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முட்டைகள்கூட சாப்பிடலாம். நடுத்தர வயதினர், வயதானவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. முடி நன்றாக வளரும். முட்டையை வேகவைத்தோ அல்லது கேரட், குடமிளகாய் சேர்த்து ஆம்லெட்டாகவோ சாப்பிடலாம்.

தினமும் சப்பாத்தி சாப்பிடுவதால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளதா?

அரிசி சாதத்துடன் ஒப்பிடும்போது சப்பாத்தியை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையைக் குறைக்க ஓரளவு உதவும். தினமும் ஒருவேளை சேர்த்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் இதை அதிக அளவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. உங்களின் உடல் எடைக்கேற்ப இரண்டோ, மூன்றோ எடுத்துக்கொள்ளலாம். கோதுமைக்குப் பதில் சிறுதானியங்களிலும் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

உடல் எடையை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்?

புரதச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் தசை வளர்ச்சி நன்றாக இருக்கும். வேகவைத்த வேர்க்கடலை சாப்பிடலாம். காய்கறிகளை நெய்யில் தாளித்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம். மோர், இளநீர் போன்ற நீர்மங்களுக்கு (Liquid) பதிலாக ஜூஸ், மில்க் ஷேக் போன்ற கூழ்மங்களை (Semisolid) அருந்தலாம். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். கட்டாயம் எட்டு மணிநேர உறக்கம் அவசியம். சரியாகத் தூங்கினாலே போதுமான அளவு வளர்ச்சி ஹார்மோன்கள் உடலில் சுரந்து உடல் எடை அதிகரிக்கும். சத்துமாவு கஞ்சி உடல் எடையை அதிகரிக்க ஏற்ற ஒன்று.

நீரிழிவு உள்ளவர்களுக்கான டயட் எப்படி இருக்க வேண்டும்?

தினமும் காலையில் டீ, காபி அருந்தும்போது சர்க்கரை சேர்க்க வேண்டாம். முதல் நாள் இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து அதை மறுநாள் காலையில் எடுத்துக்கொள்ளுங்கள். தினமும் ஐந்து பாதாம் சாப்பிடலாம். காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். மதிய உணவுக்கு முன்பாக ஒரு டம்ளர் மோர் குடிக்கலாம். மதிய உணவில் சாதம் குறைவாகவும், காய்கறிகளும் பருப்பும் அதிகமாகவும் இருக்க வேண்டும். சுட்ட அப்பளம் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் கூடாது. மீனைக் குழம்பாக வைத்துச் சேர்த்துக்கொள்ளலாம். நீரிழிவு உள்ளவர்கள் பூமிக்கு அடியில் விளையக்கூடிய உருளை, கேரட், பீட்ரூட் போன்ற கிழங்குகள், காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.

நேற்றைய ரெசிப்பி: வாழைக்காய் மேத்தி கிரேவி

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஞாயிறு 26 செப் 2021